×

கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை : கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.மிளகாய் சாகுபடி செய்யும்போது மானாவாரி மற்றும் இறவையில் பயிரிடுவதற்கு கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1 ஆகிய ரகங்கள் ஏற்றவையாக ஆகும். இதில் கோ 1 என்ற ரகமானது சாத்தூர் சம்பா ரகத்தின் மறுதேர்வு ஆகும். இந்த வகை மிளகாய் பழங்கள் நீளமாக வெளிர் சிவப்பு நிறத்துடன் காணப்படும். இந்த ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்தால் 210 நாட்களில் 2.1 டன் காய்ந்த மிளகாய் மகசூல் கிடைக்கும். இதேபோல் கோ 2 என்பது நம்பியூர் நாட்டு ரகம் தெரிவு உருண்டை வகையை சேர்ந்தது. இந்த வகை ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்யும்போது 210 நாட்களில் காய்ந்த மிளகாய் 2.2 டன் அளவில் கிடைக்கும். கோ 3 என்ற ரகமானது திறந்த மகரந்த சேர்க்கை வகையில் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டது ஆகும். ஒரு எக்டேரில் சாகுபடி செய்தால் 165 நாட்களில் 3 முதல் 3.5 டன் காய்ந்த மிளகாயும், 15 முதல் 18 டன் அளவில் பச்சை மிளகாயும் மகசூல் கிடைக்கிறது.மேலும் 2000ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கோ 4 என்ற ரகம் திறந்த மகரந்த சேர்க்கை வகையில் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரக மிளகாயை சட்னி, பொறியல் மற்றும் ஊறுகாய் செய்வதற்கு உகந்ததாக உள்ளது.இது குறைவான காரத்தன்மை கொண்டதோடு ஒரு எக்டேருக்கு 165 நாட்களில் 23 டன் பச்சை மிளகாய் மகசூல் கிடைக்கிறது. இதேபோல் வீரிய ஒட்டு கோ 1 என்ற ரகமானது பழுக்காத காய்கள் இளம் பச்சை நிறமாக நீண்ட குத்தான மிளகாய் உடையது. இந்த வகையானது காய் அழுகள் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டதாகும். ஒரு எக்டேரில் சாகுபடி செய்யும் போது 195 முதல் 205 நாட்களில் 6.75 டன் உலர்காயும், 28.10 டன் பச்சை மிளகாயும் மகசூல் கிடைக்கிறது. மேலும் கே 2 ரகமானது கே 1 மற்றும் சாத்தூர் சம்பாவின் இனக்கலப்பு ஆகும். ஒரு எக்டேரில் 210 நாட்களில் 2.1 டன் உலர் காய் கிடைக்கும். இதேபோல் கேஐ என்ற ரகம் அஸ்ஸாம் வகை பி 72 ஏ வகையின் சுத்தமான தெரிவு ஆகும். ஒரு எக்டேருக்கு 210 நாட்களில் 1.8 டன் உலர் மிளகாய் காய்கள் கிடைக்கிறது. கே.கே.எம்(சி.எச்1) என்ற ரகம் நடவு செய்து 92 நாட்களில் 3.03 டன் உலர் மிளகாய் கிடைக்கிறது. பி.கே.எம்.1 என்ற ரகம் ஏசி1797 மற்றும் சிஓ1 ன் நான்காம் தலைமுறை கலப்பு மற்றும் தன் மகரந்த சேர்க்கை மூலம் பெறப்பட்டது ஆகும்.இது அடர் சிவப்பு நிற காய்களாக காட்சி அளிப்பதோடு ஒரு எக்டேருக்கு 180 நாட்களில் 30 முதல் 32 டன் உலர் காய்கள் மகசூல் கிடைக்கிறது. பி.எல்.ஆர் 1 என்ற ரகம் கண்டான் காடு வகையின் சுத்தமான தெரிவு ஆகும்.சாகுபடி செய்து 210 நாட்களில் ஒரு எக்டேருக்கு 18.4 டன் பச்சை மிளகாய் மகசூல் கிடைக்கிறது. இதேபோல் பி.எம்.கே 1 என்ற ரகம் கோ 2 மற்றும் ராம்நாடு முண்டுவின் இனக்கலப்பில் இருந்து பெறப்பட்டது. இந்த வகை மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது ஆகும். ஒரு எக்டேருக்கு உலர் மிளகாய் 2.3 டன் அளவில் மகசூல் கிடைக்கும்.மிளகாய் சாகுபடியை ஜனவரி, பிப்ரவரி, ஜீன், ஜீலை, செப்டம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியை தொடங்குவதற்கு ஏற்ற பருவம் ஆகும்.அறுவடை: பச்சை மிளகாய் அறுவடை செய்வதற்கு நடவு செய்து 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களில் அறுவடை செய்யலாம். மேற்படி தெரிவிக்கப்பட்ட வழி முறைகளில் மிளகாய் சாகுபடி செய்தால் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் பெலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்….

The post கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kadavur ,Doghaimalai Union ,Doghaimalai ,Karur District Kadavur ,Doghaimalayas ,Union ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...