×

ஒவ்வொரு காட்சிக்கும் தலா 10 பேர் மட்டுமே வருகை: மீண்டும் மூட தயாராகும் சினிமா தியேட்டர்கள்

எதிர்பார்த்த கூட்டம் வராததால் தமிழகத்தில் திறக்கப்பட்ட தியேட்டர்கள், மீண்டும் மூடுவதற்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில் கடந்த நவ.10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 1,112 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் வெறும் 300 தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததாலும் கூட்டம் வராது என்பதாலும் மற்ற தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே தியேட்டரில் படம் திரையிட வசூலிக்கப்படும் விபிஎப் கட்டணத்தை தியேட்டர் அதிபர்களே கட்ட வேண்டும் என தயாரிப்பாளர்கள் கூறினர். தியேட்டர் அதிபர்கள் இதை ஏற்க மறுத்தனர். இதனாலும் புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் நவம்பர் மாதம் வரை விபிஎப் கட்டணத்தை வசூலிக்க மாட்டோம் என க்யூப் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்தது. இதனால் தீபாவளிக்கு பிஸ்கோத், மாரிஜுவானா, இரண்டாம் குத்து ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

புதிய படங்கள் திரைக்கு வந்ததால் மேலும் 300 தியேட்டர்கள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. மொத்தம் 600 தியேட்டர்கள் திறக்கப்பட்டும், கொரோனா பீதியால் மக்கள் தியேட்டருக்கு வரவில்லை. இதனால் ஒவ்வொரு சினிமா காட்சியிலும் ஒரு தியேட்டருக்கு தலா 10 பேர், 15 பேர் மட்டுமே வந்தனர். இதனால் சில தியேட்டர்கள், பட காட்சியை ரத்து செய்துவிட்டன. இது பற்றி தியேட்டர் அதிபர்கள் தரப்பில் கூறும்போது, ‘தியேட்டர்களுக்கு மின் கட்டணமே ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வருகிறது. இது மட்டுமின்றி பராமரிப்பு செலவுகள் பெரிய அளவில் எங்களை பாதிக்கிறது. சொத்து வரியும் கட்ட வேண்டும். இதையெல்லாம் தாண்டி படம் பார்க்க கூட்டமும் வரவில்லை. இதனால் மீண்டும் தியேட்டர்களை மூட யோசித்து வருகிறோம்’ என்றனர்.

Tags : Cinema theaters ,
× RELATED சினிமா தியேட்டர்கள் அடுத்த மாதம்...