போதை பொருள் விவகாரம்: தீபிகா படுகோனின் மேனேஜர் தலைமறைவு

போதை பொருள் வழக்கு விசாரணைக்குள்ளான நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் தலைமறைவாகியுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் 14ம் தேதி தூக்கிட்டு இறந்தார். சுஷாந்த் சிங்குடன் தொடர்புள்ள சிலர் போதை பொருள் வாங்கி விற்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தேசிய போதை பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவருடைய சகோதரர், சுஷாந்த் சிங்கின் மேனேஜர், உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். இதில் ரியாவும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ரியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. தடயவியல் பரிசோதனைக்காக அவர்களுடைய செல்போன்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தீபிகா பாடுகோனின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷும் விசாரணை செய்யப்பட்டார். இதற்கிடையே கரிஷ்மாவின் வீட்டிலிருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கரிஷ்மாவை மீண்டும் விசாரணை நடத்த விரும்பிய அதிகாரிகள், கடந்த மாதம் 28ம் தேதி அவரை ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. மேலும் அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>