×

15 நாட்களில் 4 லட்சம் பேர் பார்வையிட்டனர் சேலம் புத்தக திருவிழாவில் ₹3.75 கோடிக்கு விற்பனை-25 மாவட்டங்களில் முதலிடம் பிடித்தது

சேலம் : சேலத்தில் கடந்த 15 நாட்களாக நடந்த புத்தக திருவிழாவை 4 லட்சம் பேர் பார்வையிட்டனர். சுமார் ₹3.75 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானதன் மூலம், தமிழக அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும், மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை, 25 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், மாபெரும் புத்தகத்திருவிழா, கடந்த 20ம் தேதி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் தொடங்கியது.நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில், தென்னிந்தியா முழுவதிலும் வந்துள்ள பதிப்பாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் சார்பில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக உள்ளூர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், சேலம் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளி மாணவர்களை புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து, அவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடத்தப்பட்டன. தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்க நிகழ்ச்சி தினசரி மாலையில் நடந்தது.கடந்த 15 நாட்களாக நடந்த புத்தக கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து பார்வையிட்டு சென்றனர். தொடர்ந்து நேற்றுடன் புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது. நிறைவுநாளான நேற்று காலை, சிலம்பம், ஜூடோ, நாட்டுப்புறப் பாட்டு, மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை திருப்பாச்சி பெஞ்சமின் குழுவின் ஆட்டோகிராப் இன்னிசை, நடன, நகைச்சுவை நிகழ்ச்சியும், செண்டை மேளம், பரதநாட்டியம், மேற்கத்திய நடன நிகழ்ச்சி, படுகா நடன நிகழ்ச்சி நடந்தது. பின்னர், நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு, `துன்பம் மறந்திடு’ என்ற தலைப்பில் பேசினார். புத்தக திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு, நன்கொடையாளர்களை கவுரவித்தார்.சேலம் புத்தக திருவிழாவில், உள்ளூர் படைப்புகள், சரித்திர கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், வாழ்க்கை வரலாற்று தொகுப்புகள் என பல்வேறு தலைப்புகளின் ₹3.75 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. குறிப்பாக, பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்களை புத்தக வாசிப்பாளர்கள் ஏராளமாக வாங்கிச் சென்றுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 25 மாவட்டங்களில் நடந்த புத்தக கண்காட்சியை காட்டிலும், சேலத்தில் நடந்த புத்தக திருவிழாவில் அதிக அளவிலான பார்வையாளர்கள் மற்றும் அதிக அளவிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு, தமிழக அளவில் சேலம் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது….

The post 15 நாட்களில் 4 லட்சம் பேர் பார்வையிட்டனர் சேலம் புத்தக திருவிழாவில் ₹3.75 கோடிக்கு விற்பனை-25 மாவட்டங்களில் முதலிடம் பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Salem Book Festival ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...