×

சிங்கிள் பெண் விவசாயிகள்… ஒடிசாவில் உண்டான மறுமலர்ச்சி!

பெண் சுதந்திரம் என்பது யாதெனில் என நாம் வீட்டுக் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க வேண்டுமாயின் இந்த ஒடிசாவின் பெண் விவசாயக் குழுக்களை எடுத்துக்காட்டாகக் காட்டலாம். ஆரஞ்சுநிற சாமந்தி, நீலநிற கத்தரிக்காய், பசுமையான முட்டைக்கோஸ், இவைகள் எல்லாம் நம்மைப் பொருத்தவரை மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பொருட்கள், ஆனால் ஒடிசா பெண்களுக்கு இவை மறுமலர்ச்சியை உண்டாக்கிய சுதந்திரத்தின் வண்ணங்கள். விதவைகள், திருமணம் ஆகாத பெண்கள், என இவர்கள் என்னதான் அவரவர் வாழ்வில் முன்னேற்றம் கண்டு தனக்கென விருப்பமான வாழ்வியலில் வாழ்ந்தாலும் அதெல்லாம் நகரத்தில் மட்டுமே சாத்தியம் ஆனால், கிராமப்புறங்களில் இன்னமும் தனியாக வாழும் பெண்களை ஒதுக்குவதும், அல்லது நல்ல காரியங்களில் புறந்தள்ளி நிற்க வைத்து பார்ப்பதும் என்றே இன்றுவரை நடந்துவருகின்றன. அதெற்கெல்லாம் சேர்த்து வைத்து பளார் கொடுத்திருக்கிறார்கள் ஒடிசாவின் சிங்கிள் பெண்கள். அதிலும் வட இந்தியர்கள் பெரும்பாலும் பெண்களை சமைக்க, துவைக்க, குழந்தைகள், கணவர் பராமரிப்பு, என கிட்டத்தட்ட அடிமையாகவே இன்னும் பல கிராமப் புறங்களில் நடத்திவருகிறார்கள். இதுதான் தன் வாழ்வின் கடமை, மற்றும் கனவு என தங்களைத் தாங்களே ஏமாற்றி வாழும் பெண்களும் இதில் அடக்கம் என்பதுதான் சோகம். அப்படிப்பட்ட வட இந்தியாவில் இப்படியான ஒரு பெண் விவசாயிகளின் புரட்சி நிச்சயம் மற்ற பெண்களுக்கும் மாபெரும் உதாரணம் என்றே கூற வேண்டும். ஒடிசாவின் ரயாகடா மாவட்டத்தின் ஒரு பகுதியில் 30 சிங்கிள் பெண்கள் கொண்ட குழு தங்களை ஒதுக்கி வைத்த சமுதாயத்தை எதிர்த்து தன்னம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்தனர். அவர்களுக்குக் கைகொடுத்தது விவசாயம். ‘ஏகல் நாரி சங்கதன்’ (தனித்து வாழும் பெண்களின் சங்கமம்) என 2019ல் ஒரு அமைப்பைத் துவங்கி தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் தொழில் துவங்கலாம் என யோசித்தபோது தங்களின் நிலங்களே பெரிய மிகப்பெரிய மூலதனமாக தெரிய விவசாயத்தைக் கையில் எடுத்தனர். நாளுக்கு நாள் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. மேலும் தெங்காசார்கி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்கள்தான் விவசாய உற்பத்தியிலும், விற்பனையிலும் அக்காலம் முதல் இக்காலம் வரை புலிகள் என்பதால் கூட்டத்தின் முக்கிய முடிவுகள், எடுப்பவர்கள் அவர்களே. மேலும் எதைப் பயிரிட வேண்டும், எப்படிப் பயிரிட வேண்டும், எக்காலத்தில் விவசாயம் மற்றும் அறுவடை, எப்போது விற்பனை, விலை நிர்ணயம் என அனைத்தும் தெங்காசார்கி இனப் பெண்கள்தான் திட்டமிடுவார்கள். இந்த சிங்கிள் வுமன் சங்கமம் 2019ல் ஆரம்பித்த வேளையில் வெறும் 4 ஏக்கர் நிலங்களுடன் அதில் சாமந்தி, நீண்ட பெரிய கத்தரிக்காய், பாகற்காய், மற்றும் முட்டைக்கோஸ் பயிர்களுடன் துவங்கியது. இந்த நிலங்களும் குழுவை ஆரம்பித்த முன்னணி பெண்களுக்குச் சொந்தமாக இருந்த நிலங்கள்தான். நாளுக்கு நாள் 0.5 ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரை என ஒவ்வொரு பெண்களாக தங்களின் சொந்த நிலங்களுடன் குழுவில் இணைந்தனர். மூன்று வருடங்களில் 40 ஏக்கர் நிலங்கள் முறையே பூக்கள், பழங்கள், காய்கறிகள் என பயிரிடத் துவங்கியதில் ஒவ்வொரு வருடமும் 45 லட்சம் முதலீடு ஈட்டியுள்ளனர். அதிலும் கொரோனா காலங் களில்கூட எந்தத் தடையுமின்றி இவர்கள் நிலத்தில் வேலை செய்திருக்கிறார்கள். இந்த வருட அறுவடையில் ரூ. 75 லட்சம் வருமானம் கிடைத்திருப்பதாக பெருமிதமாகச் சொல்கிறார்கள். நிலங்கள் அனைத்தும் ஒரே பகுதியில் இல்லாத நிலையில் அங்காங்கே குழுக்களாகப் பிரிந்து இணைந்து நிலத்தில் வேலை செய்வார்களாம். அறுவடை முடிந்து விற்பனைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் முடிவின்படி பொருட்கள் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணும் முறையே ரூ. 80,000 முதல் 1.5 லட்சம் வரையில் லாபம் ஈட்டுகிறார்கள். இன்று நல்ல நிலையில் சந்தோஷமாக சுதந்திரமாக வாழும் இப்பெண்கள் ஒவ்வொருவரின் கதைகளும் நம் மனதை கனமாக்குகின்றன. எப்படி மகளிர் சிறு குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு குழுமத்தில் இருப்பார்களோ அப்படித்தான் இந்த சிங்கிள் வுமன் விவசாயிகள் குழுக்கள் செயல்படுகின்றன. இவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் முதல், பல அரசு சார் வேளாண் அமைப்புகளும் ஆதரவுக் கரம் கொடுத்து வருகிறார்கள். ஒடிசா மட்டுமின்றி தற்போது இந்த விவசாயக் குழுக்கள் பக்கத்து மாநிலங்கள், புறநகர்ப் பகுதிகள், கிராமங்கள் என விரிந்துவருகிறது. ‘அன்னபூர்ணா’ எங்களுடைய குழுவில் 98 பெண்கள் இருக்கோம். எங்கக் குழு இருக்கும் ஏரியாவிலே பிரதான பயிர் ஆரஞ்சு நிற சாமந்திதான். இங்கே நாங்கள் பயிரிடும் பூக்கள் ஒடிசா, ஆந்திரா, மாநிலங்களின் கோவில்கள், வீடுகளின் விழாக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கிறோம்’ என்கிறார் ‘அன்னபூர்ணா’ அமைப்பின் குழு நிர்வாகி மோர்பிங்கிதி. விரைவில் இந்தக் குழு தென்னிந்திய எல்லைகளில் உள்ள பெண்களையும் ஒன்றிணைக்க இருப்பதாகவும் தன்னம்பிக்கை மிளிர தெரிவிக்கின்றனர். ‘பெரும்பாலும் சிறுவயதிலேயே திருமணம், கணவர் மரணம், விவாகரத்து, போதிய வரதட்சணை பணம் இல்லாமல் திருமணமாகாத பெண்கள் என பலரும் இந்தக் குழுக்களில் உள்ளனர். எங்களுடைய நிலையை சமூகம் ஏற்றுக்கொள்ளாதது கூட பரவாயில்லை. ஆனால் சொந்தக் குடும்பமே எங்களை அவமரியாதையுடன் நடத்தினர்’ என்னும் மோர்பிங்கிதி தனது காலில் ஏற்பட்ட காயத்தால் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலைக்கு சென்றவர். மேலும் படிக்கவும் வசதி இல்லை. சகோதரர்கள் திருமணத்திற்கு பின் தனித்து விடப்பட்ட மோர்பிங்கிதியின் வாழ்க்கை மேலும் துவண்டுபோக அந்த நிலையில் கைகொடுத்தது இந்த சிங்கிள் வுமன் பெண்கள் சங்கமம். ‘ஒரு காலத்தில் ஒரு வருடத்திற்கே வருமானம் ரூ 20,000 முதல் ரூ.25,000 வரைதான் கிடைக்கும் இன்று நான் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறேன். எங்கள் வீட்டில் உண்ண உணவு இல்லை என்னும் நிலை இப்போது இல்லை. மூன்று வேளை வயிறார சாப்பிடுகிறோம். சொந்தக் காலில் கடன்கள் இல்லாமல் மரியாதையாக வாழ்கிறோம்’ என்பது சவிதா என்னும் பெண்ணின் கதை. இவர் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்தாலும் அவருடைய தினக்கூலி குடும்பம் நடத்தப் போதவில்லை என்பதால் விவசாயத்தை கையில் எடுத்தவர் சவிதா. இன்று கணவரும் அவரின் நிலத்தில் வேலை செய்கிறாராம். ‘40 வயது சால்மெயின்… சிறுவயதிலேயே கணவரை இழந்து தனது மகளுடன் தனியானவர். மகளின் வயிற்றுப் பசிக்காக தினக்கூலி, வீட்டுவேலை எனச் செய்து வந்திருக்கிறார். அதைக்கொண்டு ஒருவேளை உணவு உண்பதே சொப்பனமாக இருந்திருக்கிறது. இந்த சிங்கிள் வுமன் குழு தனக்குக் கைகொடுத்த நாள் முதல் இன்று நானும் என் மகளும் அந்தஸ்த்துடன் வாழ்கிறோம் என்கிறார் சால்மெயின். குறிப்பாக சால்மெயின் தன் மகளை புவனேஸ்வரம் கல்லூரியில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்’ இப்படி எத்தனையோ பெண்களின் கதைகள் நம் மனதை கனமாக்குகின்றன. அத்தனையையும் தவிடுபொடியாக்கி, தாங்கள் பயிரிடும் செடிகளுக்கே உரமாக்குகிறார்கள் இந்த உழைக்கும் பெண்கள். இவர்களுக்கு உதவியாக ஒடிசா அரசு, மற்றும் பாரத வேளாண் கழகம் என அனைத்தும் பல்வேறு உதவிகளைச் செய்கின்றனர். அவ்வப்போது வேளாண் நிபுணர்கள், அதிகாரிகள் நடத்தும் சிறப்புப் பயிற்சிகளும் உண்டு. இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் இவர்கள் பயிரிடும் முறையில் எவ்வித கெமிக்கலும் கிடையாது. மாட்டுச்சாணம், மக்கியக் குப்பைகள், இயற்கை உரம், எரு, கால்நடைகளின் கழிவுகள் துவங்கி இயற்கை முறை விவசாயம் மட்டுமே செய்கின்றனர். ஒடிசாவிலேயே இந்தக் குழு நிற்காமல் இந்தியா முழுக்க விரிந்து பெருகினால் பெண்கள் நிலை இன்னும் உயரம் தொடும். அடுத்த வருடம் ரூ. 2 கோடி வரை லாபம் ஈட்ட வேண்டும் என்பதே இந்த சிங்கிள் சிங்கப் பெண்களின் குறிக்கோள். தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

The post சிங்கிள் பெண் விவசாயிகள்… ஒடிசாவில் உண்டான மறுமலர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Odisha ,Renaissance ,
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து