அனுஷ்காவின் பக்குவம்: மாதவன் சர்ட்டிபிகேட்

ரெண்டு படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்தார் அனுஷ்கா. இதுதான் தமிழில் அனுஷ்காவின் முதல் படம். இதையடுத்து பல படங்களில் அவர் நடித்தார். ரெண்டு படத்துக்கு பிறகு மாதவனும் அனுஷ்காவும் இணைந்து நடிக்கவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சைலன்ஸ் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். ஹேமந்த் மதுகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஓடிடியில் வரும் அக்டோபர் 2ம் தேதி படம் வெளியாகிறது. மாதவன் கூறும்போது, ‘இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யவே முதலில் தீர்மானித்து இருந்தோம். ஆனால் இப்போதைய சூழலில் அது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.

ஒரு சமயத்தில் டிஜிட்டலில் படங்களை பார்ப்போம் என யோசித்து இருந்தேன். அது இப்போது உண்மையாகிவிட்டது. இது தவிர்க்க முடியாத தொழில்நுட்ப வளர்ச்சி. கொரோனா நேரத்தில் இது பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. ரெண்டு படத்துக்கு பிறகு இதில் அனுஷ்காவுடன் சேர்ந்து நடித்துள்ளேன். அப்போது எப்படி சினிமா மீது ஆர்வத்துடனும் நடிப்பில் ஈடுபாடுடனும் இருந்தாரோ அதே ஆர்வம், ஈடுபாட்டுடன் இப்போதும் இருக்கிறார். முன்பை விட இப்போது சினிமா தொடர்பாக பக்குவம் அடைந்துள்ளார்’ என்றார்.

Related Stories:

>