×

நீட் தேர்வில் மதிப்பெண் திருத்திய விவகாரம்: 25 ஆயிரத்துக்கு போலி சான்றிதழ் விற்பனை: ராமநாதபுரம் புரோக்கரை பிடிக்க போலீசார் விரைவு

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்‌ஷா. நீட் தேர்வில் 27 மதிப்பெண் பெற்ற நிலையில் 25 ஆயிரம் கொடுத்து 610 மதிப்பெண் பெற்றதாக சான்றுகளை மருத்துவ படிப்பில் பங்கேற்க சமர்ப்பித்தார். அத்துடன் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு கடிதம் என 3 ஆவணங்களை போலியாக சமர்ப்பித்தார். இது தொடர்பாக தலைமறைவாக இருந்த, மாணவியின் தந்தை பல் டாக்டர் பாலசந்திரனை 6 பிரிவுகளின் கீழ் கடந்த 1ம் தேதி பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். பல் டாக்டர் பாலசந்திரனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயராம் என்பவரிடம் பல் டாக்டர் பாலசந்திரன், தன் மகள் நீட் தேர்வில் பெற்ற 27 மதிப்பெண் குறித்து கூறினார். அதற்கு ஜெயராமன் மாற்று யோசனை தெரிவித்துள்ளார். அதற்காக 25 ஆயிரம் பேரம் பேசி உள்ளார். அதற்கு முதலில் தயங்கிய பாலசந்திரன், பின்னர் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த திட்டத்துக் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் சொன்னப்படி ரூ.25 ஆயிரத்தை ஜெயராமனிடம் கொடுத்துள்ளார். அதன்படி ஜெயராம் நீட் தேர்வில் 610 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரின் மதிப்பெண்ணை பல் டாக்டர் பாலசந்திரன் மகள் தீக்‌ஷா பெற்றது போல் மாற்றி கொடுத்துள்ளார். இந்த சான்றுகளை வைத்து தான் ஆன்லைன் மூலம் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.அப்போது ஆன்லைனில் அனைத்து ஆவணங்களும் ஏற்றுக்கொண்டதால் தமிழக அரசு வெளியிட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் வேறு ஒரு மாணவியின் புகைப்படத்தை எடுத்துவிட்டு தீக்‌ஷாவின் போட்டோ, பதிவு எண்களை மாற்றி போலி சான்று தயாரித்து கொடுத்துள்ளார். மேலும் கலந்தாய்வுக்கான அனுமதி சீட்டும் தயாரித்து கொடுத்து யாருக்கும் எந்த சந்தேகம் வராது என்று கூறி பாலசந்திரனிடம் கொடுத்து அவரது மகள் தீக்‌ஷாவை கடந்த நவம்பர் 30ம் தேதி தொடங்கிய பொது மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள செய்துள்ளார். ஆனால் மருத்துவ கலந்தாய்வில் மாணவி தீக்‌ஷாவின் பெயரை அழைக்க வில்லை என்று கூறி பல் டாக்டர் பாலசந்திரன் அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டதே இவர்களின் மோசடி வெளியாக காரணமாகி விட்டது. பாலசந்திரன் கூறியபடி ரூ.25 ஆயிரம் பணம் பெற்று கொண்டு போலியாக சான்றிதழ்களை தயாரித்து கொடுத்த ஜெயராமனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்….

The post நீட் தேர்வில் மதிப்பெண் திருத்திய விவகாரம்: 25 ஆயிரத்துக்கு போலி சான்றிதழ் விற்பனை: ராமநாதபுரம் புரோக்கரை பிடிக்க போலீசார் விரைவு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Chennai ,Deeksha ,Paramakkudy, ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...