×

கடல் போல் காட்சியளித்த மெரினா கடற்கரை மணற்பரப்பு; சென்னையில் 350 மரங்கள் முறிந்து விழுந்தன: அப்புறப்படுத்தும் பணியில் 25ஆயிரம் பணியாளர்கள்

சென்னை: மாண்டஸ் புயல் தாக்கத்தால் சென்னையில் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடல் அலைகள் 14 அடி உயரத்துக்கு எழும்பியதால் கடற்கரை மணற்பரப்பில் கடல் நீர் புகுந்ததால் ஆள் உயரத்துக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் மெரினா கடற்கரை மணல் பரப்பே காணாமல் போனது. அனைத்தும் தண்ணீர் முழ்கியதால் மெரினா கடற்கரை சாலையில் இருந்து பார்த்தால் அங்கிருந்தே கடல் தொடங்குவது போன்று காணப்பட்டது. காலையில் கடலை பார்க்க சென்ற மக்களுக்கு பெரும் வியப்பாக இருந்தது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடலோர மீனவ பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் தங்கள் கட்டுமரங்கள், படகுகள், வலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சென்னை முழுவதும் மழையும் இடைவிடாமல்  தொடர்ந்து பெய்தது. இதனால் கடலோர மீனவப் பகுதியில் வசிப்பவர்களை பாதுகாக்க நேற்று காலை முதலே சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக குடிசை வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணியை தொடங்கினர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடல் நீர் புகுந்த பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் சென்னை முழுவதும் சாலையோர மரங்களின் கிளைகள் பல இடங்களில் விழுந்தன. மேலும் வீடுகளில் இருந்த மரங்களும் சாய்ந்து வாகனங்கள் பல சேதமாகின. இதனால் சாலைகளில் மரங்கள் கிளைகள் பரந்து கிடந்தது. இதனால் இன்று காலை முதலே சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல இடங்களில் பெரிய மற்றும் சிறிய மரங்கள் என 350க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 272 மர அறுவை இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், ஒரு பகுதிக்கு ஒரு ஜேசிபி என 45 ஜேசிபி வாகனங்கள், 115 டிப்பர் லாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வார்டிலும் அவசர கால தேவைக்காக ஒரு சிறிய இலகு ரக வாகனம் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவற்றுடன் 10 பணியாளர்கள் என நேற்று இரவு முதல் தொடர்ந்து இன்று வரை தீவிரமாக களப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேட்டி கூறியதாவது: இதுவரை  பொதுமக்களிடம் இருந்து 150க்கும் மேற்பட்ட  புகார்கள் வந்துள்ளது. அதில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் விழுந்துள்ளதாகவும், சில இடங்களில் தண்ணீர் தேங்கியதாகவும் புகார் வந்துள்ளது.அந்த புகார்கள் உடனடியாக கவனிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது. மேலும்  களப்பணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள  ஒவ்வொரு மண்டலத்திலும் சராசரியாக 25 முதல் 30 மரங்கள் விழுந்துள்ளன. சென்னை மாநகர் முழுவதும் 350க்கும் மேற்பட்ட மரங்கள் முழுவதுமாகவும், கிளைகள் முறிந்தும் விழுந்துள்ளன. அந்த மரங்களை அகற்றும்  பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மட்டும் 5000 மாநகராட்சி பணியாளர்கள் பணியில் இருந்தனர். சென்னை முழுவதும் புயல் சேதங்களை சீரமைக்க தற்போது 25 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார். …

The post கடல் போல் காட்சியளித்த மெரினா கடற்கரை மணற்பரப்பு; சென்னையில் 350 மரங்கள் முறிந்து விழுந்தன: அப்புறப்படுத்தும் பணியில் 25ஆயிரம் பணியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Marina Beach Sandal ,Chennai ,Mandas ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...