விஷால் படத்துக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: நடிகர் விஷால் நடித்துவரும் சக்ரா படத்தை இயக்கவும் வெளியிடவும் தடை விதிக்கக்கோரிய வழக்கில் படத்தின் இயக்குநர் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாப்பூரை சேர்ந்த ஆர்.ரவீந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், “நடிகர் விஷால் நடிப்பில் ‘புரடக்‌ஷன் நம்பர் 5’ என்ற பெயரில் படத்தை தயாரிக்க திட்டமிட்டேன். இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரி வேடத்திலும், படத்தின் கதாநாயகி எதிர் கேரக்டர் வேடத்திலும் நடிப்பதாக கதை உருவாக்கப்பட்டது. படத்தை இயக்குவதற்காக வளசரவாக்கத்தை சேர்ந்த எம்.ஆனந்தன் என்ற இயக்குநருடன் கடந்த 2018 ஆகஸ்ட 29ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு வந்ததால் படப்பிடிப்பு முற்றிலும் நின்றுவிட்டது. இந்த நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் ‘’சக்ரா’’ என்ற பெயரில் ஆனந்தன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் கடந்த ஜூன் 27ல் வெளியிடப்பட்டது.

இந்த படத்திலும் விஷால் ராணுவ அதிகாரி வேடத்திலும், கதாநாயகி எதிர் கேரக்டர் வேடத்திலும் நடித்துள்ளனர். இதே கதையுடன் படத்தை தயாரிக்க போடப்பட்ட ஒப்பந்தம் இதுவரை காலாவதியாகாத நிலையில் ஒப்பந்தத்திற்கு முரணாக ஆனந்தன் சக்ரா படத்தை இயக்கியுள்ளார். எனவே, ஒப்பந்தத்திற்கு மாறாக விஷால் நடிப்பில் சக்ரா படத்தை இயக்கவும் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். காப்புறுதி தொகையாக இயக்குநர் ஆனந்தன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, வரும் வியாழக்கிழமை விஷால் மற்றும் இயக்குநர் ஆனந்தன் ஆகியோர் பதில் தருமாறு உத்தரவிட்டார்.

Related Stories:

>