×

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது கடமையல்ல அவர்களின் உரிமை: காவலர்கள் அவர்களை கையாளுவது குறித்த புத்தக தொகுப்பு அரசு வெளியீடு

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் பிரச்னையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தாலும் 1992 முதல் டிச.3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளாக கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு செல்லும் காவல் நிலையங்களில் அவர்களுக்கு தகுந்த உதவிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை மாற்றுதிறனாளிகள் பலர் முன் வைத்து வந்தனர். அதேநேரம் காவலர்கள் தங்களை கன்னியமுடன் நடத்துவதில்லை என்றும் தெரிவித்தனர். எனவே, புகார் அளிக்க வரும் மாற்றுத் திறனாளிகளை கனிவுடன் அணுகவும், முறையாக கையாள்வதற்கும்  காவலர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்தது. காவல் நிலையம் வரும் அவர்களை எவ்வாறு கையாள்வது அல்லது பொது வெளியில் மாற்றுதிறனாளிகளிடம் காவல் துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளையும் பயிற்சியாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுதிறனாளிகள் எவ்வித சிரமுமின்றி தங்கள் புகார் மனுவை அளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தகுந்த அறிவுரைகள் காவல் துறையால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காவல் துறையினர் மாற்றுத்திறனாளிகளை சந்திக்க நேரும் போது நினைவில் கொள்ள வேண்டிய தகவல்கள் என்ற தலைப்பில் புத்தகம் வாயிலாக சில அறிவுரைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு: காவல் நிலையங்களில் மற்ற எல்லோரையும் எப்படி கன்னியமுடன் நடத்துவோமோ அதைப் போலவே மாற்றுத்திறனாளிகளை நடத்த வேண்டும். மேலும் கூடுதல் பரிவுடன் நடத்த வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. உதாரணமாக, 4 பேர் ஆய்வாளர் அறைக்கு வெளியே காத்திருந்தால், குறைகளை சுட்டிக்காட்டி அழைக்காமல், அவர்களின் பெயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள ஒருவருடன் பேசும்போது நின்ற நிலையில் இருந்து பேசுவதை காட்டிலும் அவர்களின் கண்கள் இருக்கின்ற மட்டத்திற்கு காவலரின் கண்களும் இருக்கின்ற சரிமட்டத்திற்கு வரும் வகையில் அமர்ந்து பேசுவது அவர்களுக்கு வசதியாக இருக்கும்.  நான் யார் என்று மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்கிற மனப்பாங்கை கொஞ்சம் முயற்சி செய்து கைவிட்டு தன்னை அறிமுகப்படுத்தி கொள்வது மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். முன்பெல்லாம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது கடமை என்று சொல்லி வந்தோம். இப்போது அது மாற்றுத்திறனாளிகளின் உரிமை. அவர்களுக்கு அதை நிலைநாட்டும் வாய்ப்பு தரப்பட்டாக வேண்டும் என்று உணர வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது. மாற்றுத்திறனாளிகளோடு காவலர்கள் பேசும் போது, அவர்களுக்கு பேச இயலவில்லை என்றால் சைகை மொழி பெயர்ப்பாளரை அருகிலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலம் அழைத்து அவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கண்கள் தெரியாதவர் என்றால் கைகளை குலுக்குவதன் மூலமும், கனிவான குரலோடு அவர்களை அமர வைத்து பேசுவதன் மூலமும் கணிணி, செல்போன் மூலமும் தகவல் தொடர்பில் உதவலாம். இதுபோன்று, மாற்றுத்திறனாளிகளை காவலர்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்த சில தகவல்கள் அடங்கிய புத்தக தொகுப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது கடமையல்ல அவர்களின் உரிமை: காவலர்கள் அவர்களை கையாளுவது குறித்த புத்தக தொகுப்பு அரசு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : International Day of Persons with Disabilities ,Persons with Disabilities ,CHENNAI ,International Day of Disabled Persons ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...