×

குப்பை வண்டிகளை இழுக்க ஆளில்லை; அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரி வாகனங்கள்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவாடானை: ஊராட்சிகளில் குப்பை வண்டிகளை இழுக்க போதிய ஆட்கள் இல்லாததால் பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள பல கிராமங்களுக்கு தெருக்கள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளை அகற்ற துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணிக்கு போதிய எண்ணிக்கயைில் ஆட்கள் கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனால் பல ஊராட்சிகளிலும் பெண்கள் மற்றும் வயதானவர்களை பணியில் நியமித்துள்ளனர்.இவர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி சார்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று சக்கர சைக்கிளில் கொட்டி அவற்றை இழுத்துச்சென்று 2 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள குப்பை சேகரிப்பு மையங்களில் சேர்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது. குடியிருப்பு பகுதிகள் அருகே குப்பைகளை கொட்டக்கூடாது. இதனால் குப்பை கொட்டும் இடத்திற்கு வண்டிகளை இழுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. பல ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வண்டிகளில் இழுத்துச் செல்ல முடியாத காரணத்தால், அந்தந்த பகுதிகளிலேயே கொட்டி தீவைத்து கொளுத்துகின்றனர்.இதனால் அந்த பகுதியில் புகைமூட்டம் உருவாகி மாசு ஏற்படுகிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் குப்பைகள் கொட்டுவதற்கு பொது இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குப்பைகள் சேர்ந்ததும் லாரிகளில் எடுத்துச்செல்கின்றனர். மேலும் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இதேபோல் பேரூராட்சிகளில் குப்பை சேகரிக்கும் பணியில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.ஆனால் கிராம ஊராட்சிகளுக்கு கை வண்டியில் மட்டுமே குப்பைகளை சேகரித்து நீண்ட தூரம் இழுத்துச்சென்று சேகரிப்பு இடங்களில் கொட்டும் நிலை தொடர்கிறது. இதற்கிடையே பல ஊராட்சிகளில் பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. அதுபோன்ற ஊராட்சிகளுக்கு மட்டும் குப்பைகளை அள்ளிச்செல்ல பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற கிராம ஊராட்சிகளில் கைவண்டிகளில் மட்டுமே குப்பைகளை அகற்ற வேண்டியுள்ளது. எனவே மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் பேட்டரியால் செயல்படும் குப்பை வண்டிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து துப்புரவு தொழிலாளர் சங்க நிர்வாகியும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான நாகநாதன் கூறுகையில், ”நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய பணியாளர்களும், குப்பை அள்ள வாகனங்களும் போதுமான அளவில் உள்ளன. ஆனால் கிராம ஊராட்சிகளுக்கு குப்பைகள் சேகரிக்கும் வண்டிகளை இழுக்க போதிய ஆட்கள் பணியில் இல்லை. கிராம ஊராட்சிகளுக்கு நிதி பற்றாக்குறை இருப்பதால் டிராக்டர் உள்ளிட்ட குப்பை அள்ளு் வாகனங்களை வாங்க முடியவில்லை. ஆனால் பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டி வழங்கினால் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடும் தேவையில்லை. பராமரிப்பும் சுலபமானது. எனவே மாவட்டத்தில் ஊராட்சிகளில் குப்பை வண்டிகளை இழுக்க ஆட்கள் பற்றாக்குறை இருப்பதை ஏற்றுக்கொண்டு பேட்டரியால் இயங்கும் வண்டிகளை வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்….

The post குப்பை வண்டிகளை இழுக்க ஆளில்லை; அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரி வாகனங்கள்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvadana ,Urrachis ,
× RELATED வாகனங்களின் டயரை பஞ்சராக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை