×

மேட்டூரில் மீன்பிடி தொழில் மீண்டும் சுறுசுறுப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியதால் மீன்பிடிக்க மீனவர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இந்த நீர்தேக்கத்தில் கட்லா, ரோகு, மிர்கால், அரஞ்சான், ஆறால், கெண்டை, கெளுத்தி, ஜிலேபி உள்ளிட்ட 20 வகையான மீன்கள் பிடிபடுகின்றன. இரண்டாயிரம் மீனவர்களும், இரண்டாயிரம் மீனவர் உதவியாளர்களும் மீன்பிடி உரிமம் பெற்று மேட்டூர் நீர்தேக்கத் தில் மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தொழில் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்தாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். நீண்டநாட்களாக மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருந்ததால் காவிரி கரையில் முகாமிட்டிருந்த மீனவர்கள் முகாம்களை காலி செய்து விட்டு சொந்த கிராமங்களுக்கு சென்றனர். தற்போது காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால் மீன்கள் கிடைக்கும் காரணத்தால் தங்களின் சொந்த கிராமங்களுக்கு சென்ற மீனவர்களும் முகாம் களிலேயே முடங்கி கிடந்த மீனவர்களும் மீன்கள் பிடிக்க செல்ல தங்களை தயார்படுத்தி வருகின்றனர். தற்போது அடிபாலாறு, செட்டிப்பட்டி, ஏமனூர், கோட்டையூர், ஒட்டனூர், நாகமரை, பண்ணவாடி, சேத்துக்குழி, மாசிலாபாலையம், கீரைக்காரனூர், பூனாஞ்சூர் முகாம்களுக்கு மீனவர்கள் மீண்டும் வர தொடங்கியுள்ளனர். தங்களின் பரிசல்கள், வலைகளை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வெறிச்சோடி கிடந்த முகாம்கள் மீனவர்கள் வருகையால் மீண்டும் சுறுசுறுப்பாகி உள்ளது. நீண்டநாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்ததால் மீன்வளம் பெருகி இருக்கும் எனவும், இதனால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் எனவும் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்….

The post மேட்டூரில் மீன்பிடி தொழில் மீண்டும் சுறுசுறுப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur ,Mettur Dam ,Salem District Mettur Reservoir ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் நீர்வரத்து 11,631 கனஅடியாக உயர்வு..!!