×

கங்கனாவுக்கு ‘ஒய்’ பிளஸ் பாதுகாப்பு

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பாலிவுட்டில் நிலவும் வாரிசு ஆதிக்கம், பாலியல் ெதால்லை, மாஃபியாக்கள் ஊடுருவல் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். ‘இளம் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் மகாராஷ்டிரா அரசு ஆர்வம் காட்டவில்லை. சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கிறது’ என்று கூறினார். இதற்கு மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு கங்கனா, மும்பைக்குள் காலடி எடுத்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். 

இதற்கு பதில் அளித்த கங்கனா, ‘மும்பை மினி பாகிஸ்தானா, அங்கு நடப்பது தலிபான்கள் ஆட்சியா’ என்று கேள்வி எழுப்பியதோடு ‘வருகிற 9ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் இருந்து மும்பை வருகிறேன். முடிந்தால் தடுத்துப் பார்’ என்று ஆவேசமாக கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கங்கனாவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒய்-பிளஸ் பாதுகாப்பு பெறும் முதல் பாலிவுட் நட்சத்திரம் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.

யார், யாருக்கு ஒய்-பிளஸ்
நாட்டின் பெரிய துணை ராணுவப் படையான சிஆர்பிஎப் கமாண்டோ வீரர்கள் ஒய்-பிளஸ் பாதுகாப்பில் உள்ள 60 விஐபிக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் ஒய் பிளஸ் பாதுகாப்பை பெறுகின்றனர். தனியாரில்  ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி இருவரும் ஒய்-பிளஸ் பாதுகாப்பை பெறுகின்றனர். ஆனால் இப்பாதுகாப்புக்காக அவர்கள் தனியாக அரசுக்கு கட்டணம் செலுத்துகின்றனர். இதே போல கங்கனாவும் கட்டணம் செலுத்தி பாதுகாப்பை பெறுகிறாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

எப்படியிருக்கும் பாதுகாப்பு?
ஒய்-பிளஸ் பாதுகாப்பில் 10-11 கமாண்டோ வீரர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். கங்கனாவுடன் இனி 2-3 கமாண்டோ வீரர்கள் எப்போதும் உடனிருப்பார்கள். அவர் செல்லுமிடத்திற்கு உடன் செல்வார்கள். கங்கனா வீடு சிஆர்பிஎப் வீரர்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். அவர்கள் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது. கங்கனா காருடன் பாதுகாப்பு வீரர்கள் வாகனமும் உடன் செல்லும். எந்த மாதிரியான சூழலையும் சமாளித்து பாதுகாப்பு அளிக்கும் திறமை படைத்தவர்கள் சிஆர்பிஎப் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kangana ,
× RELATED பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடிகை...