×

டிச.3, 4ம் தேதிகளில் மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் நினைவாக 6 மாநிலங்கள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: டிச.3, 4ம் தேதிகளில் மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் நினைவாக 6 மாநிலங்கள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேரு உள்விளையாட்டு அரங்கில் மகளிர் கால்பந்தாட்ட போட்டி முன்னேற்பாடுகளை பார்வையிட்டபின் தெரிவித்ததாவது; ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணியின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர், கர்ப்பிணி பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 15 வகையான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம், குருதிக்கொடை வழங்குதல், கருணை இல்லங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஒரு மாத காலத்திற்கான உணவுப் பொருட்கள் வழங்குதல், அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இருக்கைகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற  14 வகையான நிகழ்ச்சிகள் இன்று வரை  நடத்தப்பட்டன. 15 வது நிகழ்ச்சியாக மறைந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா அவர்களின் நினைவாக, வருகின்ற டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியினை டிசம்பர் 3 அன்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். 4 ஆம் தேதி மாலை நிறைவு விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெற்றிப் பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சம் ரொக்கம், இரண்டாம் பரிசாக ரூ. ஒரு இலட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரத்துடன் பரிசுக்கோப்பைகளை வழங்க உள்ளார். இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாவட்டங்களின் முன்னணி கால்பந்து குழுக்களும், சென்னையை சேர்ந்த 6 கால்பந்து குழுக்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த குழுக்கள் உட்பட 18 கால்பந்தாட்ட குழுக்கள் பங்கேற்கின்றன. போட்டிகளில் கலந்து கொள்ளும் 300 வீராங்கனைகளுக்கும் போட்டிகளில் பயன்படுத்தும் வகையிலான இளைஞர் அணி லோகோ மற்றும் நினைவில் வாழும் விளையாட்டு வீராங்கனை பிரியா அவர்களின் உருவம் பதித்த ஜெர்ஸி ஆடைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலான இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி. மகேஷ் குமார் முன்னிலையில் பகுதி கழகச் செயலாளர்கள் வி. சுதாகர், சொ.வேலு, வட்டக் கழக செயலாளர் ஆர். பாபு. பகுதிக் கழக துணைச் செயலாளரும் மாநில கால்பந்தாட்ட வீரருமான டி.வி.வேலு மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த ஆண்டு தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இறுதிப்போட்டியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்து இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபாடு மற்றும் உற்சாகம் அடைகின்ற வகையில் நடத்தினோம்.அதேபோல இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு மறைந்து மறையாமல் இருக்கின்ற கால்பந்து  விளையாட்டு வீராங்கனை பிரியாவின் நினைவாக, அவருடைய எண்ணங்களை ஈடேற்றும் வகையில் ஒரு உந்து சக்தியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் அமையும் என நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்….

The post டிச.3, 4ம் தேதிகளில் மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் நினைவாக 6 மாநிலங்கள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Priya ,Minister ,Seekarbabu ,Women's Football Tournament ,Veerangana Priya ,
× RELATED ரத்னம் விமர்சனம்