×

சென்னையில் இருந்து தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் இயந்திர கோளாறு: 139 பயணிகள் தப்பினர்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 146 பேர் உயிர் தப்பினர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3.20 மணிக்கு, கத்தார் தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் செல்வது வழக்கம். இந்த விமானம் தினமும் அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்படும். அதேபோன்று இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை வந்த விமானத்தில், 139 பயணிகள் தோகா செல்ல இருந்தனர்.அவர்கள், பாதுகாப்பு சோதனை, சுங்க சோதனையை முடித்துவிட்டு தயார் நிலையில் இருந்தனர். விமானம் வந்ததும் ஏறி அமர்ந்தனர். 139 பயணிகள், விமான ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 146 பேருடன் புறப்பட்டது. ஓடுபாதையில் ஓட தொடங்கியபோது இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்தார். உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு அவசரமாக நிறுத்தினார். இதையடுத்து, இழுவை வண்டி மூலம் விமானத்தை இழுத்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பொறியாளர்கள் குழுவினர் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காலை 6 மணி வரை பழுது பார்க்கப்படவில்லை. இதையடுத்து பயணிகள் இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வாறு பழுது பார்க்க முடியவில்லை என்றால், பயணிகளை ஓட்டல்களில் தங்க வைத்து விட்டு, இன்று இரவு அல்லது நாளை அதிகாலைதான் விமானம் புறப்பட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் 139 பயணிகள் தவிக்கின்றனர். தகுந்த நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 146 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post சென்னையில் இருந்து தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் இயந்திர கோளாறு: 139 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Qatar ,Chennai ,Doha ,Qatar Airlines ,Dinakaran ,
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...