×

மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்பு நடத்தலாம்: நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை டிசம்பர் 5ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை கண்டித்து கடந்த ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளியில் உள்ள பொருட்கள்  சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, பள்ளி மூடப்பட்டது. தற்போது பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதால், இ.சி.ஆர்., மற்றும் சக்தி பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மரணமடைந்த மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் தரப்பில் பள்ளியை திறக்க ஒப்புதல் அளித்தாலும், சின்னஞ்சிறு மழலைகள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொது தேர்வை எதிர்நோக்கியுள்ள 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை டிசம்பர் 5ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளியில் உள்ள ஏ மற்றும் பி பிளாக்குகளை பயன்படுத்தலாம். ஆனால் ஏ பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3வது மாடியை பயன்படுத்தக் கூடாது. விடுதி உள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும். தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த சி மற்றும் டி பிளாக்குகளை பயன்படுத்தக் கூடாது. ஒரு மாதத்திற்கு பிறகு  நீதிமன்றம் அப்போதைய நிலையை ஆராயும் என கூறி விசாரணையை ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….

The post மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்பு நடத்தலாம்: நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kadakkurichi school ,Chennai ,Kallakkirichi Kaniyamur ,Kolakurichi ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...