×

எவ்வளவு குடித்தும் போதை ஏறாததால் மீண்டும் மது கேட்டு ரயில்வே நடைமேம்பாலத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ரயில் நிலைய நடைமேடையில் இருந்து எதிர்புறம் உள்ள நடை மேடைக்கு செல்ல தண்டவாள பாதைக்கு மேலே நடைபாலம்  உள்ளது. நேற்று மாலை நடை பாலத்தின் வெளிப்புற கம்பங்களை பிடித்தவாறு, கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஒரு வாலிபர் இந்தியில் கூச்சலிட்டார். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து, ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று அவரை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு, அவர் மதுபாட்டில் வேண்டும் அப்போதுதான் கீழே இறங்குவேன் என பதில் அளித்துள்ளார். இதனால், ரயில்வே போலீசார் தூரத்தில் இருந்து, அந்த வாலிபரிடம் சமாதானம் செய்தும், அவர் இறங்கி வரவில்லை. பிறகு மதுபாட்டிலை வாங்கி வந்து கையில் வைத்துக்கொண்டு, வாலிபரை கீழே இறங்குமாறு கூறினர். அவர் யாரும் மேலே வரக்கூடாது, வந்தால் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டினார்.இதையடுத்து, திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாலிபர் கீழே குதித்தால் காயம் ஏற்படாமல் இருக்க தார்பாய்களை விரித்து பிடித்த வண்ணம் பேச்சு கொடுத்தனர். சிறிது நேரம் வாலிபரின் கவனத்தை திசை திருப்பிய போலீசார், மற்றொரு புறத்திலிருந்து, நடைபாலத்தில் ஏறி வாலிபரை பிடித்து  லாவகமாக மீட்டனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் (30), சில மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு திருவொற்றியூருக்கு வந்தவர், மதுவுக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். எவ்வளவு மது குடித்தும் போதை ஏறாமல் இருந்ததால், இன்னும் மது வேண்டும் என்பதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. பிறகு ரயில்வே போலீசார் அவரை மனநல காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் போராடி வாலிபரை போலீசார் மீட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post எவ்வளவு குடித்தும் போதை ஏறாததால் மீண்டும் மது கேட்டு ரயில்வே நடைமேம்பாலத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; திருவொற்றியூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvottyur ,Thiruvoteur ,Thiruvoteur Railway Station ,Thiruvottur ,
× RELATED திருவொற்றியூர் சர்வீஸ் சாலையில்...