தமிழில், தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்துள்ளவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஊசரவெல்லி, மிஸ்டர் ராஸ்கல், பிரயாணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு பதிவில், மனஅழுத்த பிரச்னையால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருந்தார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
தேசிய விருது பெற்றுள்ள சில தென்னிந்திய இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். அவர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். அவர்களுடனும் தென்னிந்திய ஹீரோக்களுடனும் பணிபுரியும்போது எனக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்கள் ஹீரோயின்களை மரியாதையுடன் பார்க்கிறார்கள், நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு கோயில் கட்டி வணங்குகிறார்கள்.
நான் இந்தி சினிமாவில் வாய்ப்பு தேடியபோது, தென்னிந்திய படங்களில் நடித்ததை பற்றி யாரிடமும் சொல்லாதே என்று சிலர் சொன்னார்கள். காரணம், தென்னிந்திய நடிகைகள் பற்றி பாலிவுட்டில் தவறான எண்ணம் இருக்கிறது. தென்னிந்திய படங்களில் நடித்து வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே, பாலிவுட்டில் கவனம் செலுத்து என்று இந்தி திரையுலகை சேர்ந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள். பாலிவுட்டில் எனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து பார்க்கும்போது தமிழ், தெலுங்கில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று இப்போது நினைக்கிறேன். பாலிவுட் சினிமா, இப்போது தென்னிந்திய படங்களைத்தான் நம்பி இருக்கின்றன. அங்கிருந்துதான் பல படங்கள் ரீமேக் செய்யப்படுகின்றன. இவ்வாறு பாயல் கோஷ் கூறினார்.