×

இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் அனுமதி அளித்தும் படப்பிடிப்புக்கு வர நடிகர், நடிகைகள் தயக்கம்: கொரோனா பீதியால் ஷூட்டிங் பாதிப்பு

இந்தி, தெலுங்கு, மலையாள படங்களுக்கான படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி பல நாட்கள் ஆன நிலையில் ஷூட்டிங் செல்ல நடிகர், நடிகைகள் தயக்கம் காட்டுகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு அமலில் உள்ளது. தொடர்ந்து 3 மாதத்துக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதில் திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்தந்த மாநில அரசுகளிடம் திரைத்துறையினர் படப்பிடிப்புக்கு அனுமதி கோரி மனு அளித்தனர். இதையடுத்து 60 வயதானவர்களை படப்பிடிப்பில் அனுமதிக்க கூடாது, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், படப்பிடிப்பில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இந்தி, தெலுங்கு, மலையாள படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதுபோல் அனுமதி வழங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டன. மலையாளத்தில் சுனாமி என்ற படத்தின் படப்பிடிப்பு மட்டுமே நடந்துள்ளது. 

தெலுங்கில் நானி நடிக்கும் வி என்ற பட ஷூட்டிங் மட்டும் ஓரிரு நாள் நடந்துள்ளது. இந்தியில் எந்த பட ஷூட்டிங்கும் நடக்கவில்லை. ஒவ்வொரு மொழியிலும் தலா 20 முதல் 30 படங்கள் வரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு அனுமதி வழங்கியதும் இந்த படப்பிடிப்புகள் அனைத்தும் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், நடிகர், நடிகைகள் சில தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கு வர மறுப்பதால் 3 மொழியிலும் ஷூட்டிங் நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. ‘பல இடங்களிலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இந்த சமயத்தில் படப்பிடிப்புக்கு செல்வது பாதுகாப்பானது கிடையாது. 50 பேர் கூடும் இடத்தில் கேமராவுக்கு அருகில் அனைவரும் நிற்க வேண்டும். இதனால் சமூக இடைவெளி கடைபிடிப்பது சுலபம் அல்ல. ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த காரணங்களால் நடிகர், நடிகைகளும் சில டெக்னீஷியன்களும் படப்பிடிப்புக்கு வர தயங்குகின்றனர். அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வர முடியாது’ என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கொரோனா தாக்கம் முற்றிலும் குறைந்தால் மட்டுமே படப்பிடிப்புகள் முன்புபோல் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Tags : Actor ,actresses ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...