×

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 – 12ம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தலாம்: ஐகோர்ட் அனுமதி

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளியை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக அங்கு வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை பொறுத்தவரை பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளி கட்டிடம் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகிறதா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, விசாரணை முடியும் தருவாயில் உள்ளது; குற்றப்பத்திரிகையை 3 மாதத்தில் தாக்கல் செய்துவிடுவோம் என்று தெரிவித்தார். மேலும் பள்ளியை திறக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று குறிப்பிட்டார். இதேபோல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதனை செயல்படுத்த தயாராக இருப்பதாக கூறினார். இந்த வாதங்களை எல்லாம் கேட்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 – 12ம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார். சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை நடத்தலாம். ஒரு மாதத்துக்கு பிறகு அப்போதைய நிலைமையை நீதிமன்றம் ஆராய்ந்து புதிய உத்தரவு பிறப்பிக்கும் என நீதிபதி தெரிவித்தார். பொதுத்தேர்வை எதிர் நோக்கியுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளியை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ.சி.ஆர். பள்ளி மற்றும் சக்தி பள்ளி ஆகியவற்றில் டிசம்பர் 5ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறினார். கனியமூர் பள்ளியில் ஏ மற்றும் பி பிளாக்குகளை மட்டுமே பயன்படுத்தலாம், எனினும் ஏ பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3வது தளத்தை பயன்படுத்தக்கூடாது. தீ வைத்ததில் மிகுந்த சேதமடைந்த சி, டி பிளாக்குகளை பயன்படுத்தக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். மாணவர்கள், மழலையர் நலனை கருத்தில் கொண்டு பகுதி அளவு பள்ளியை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்….

The post கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 – 12ம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தலாம்: ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kallakkiruchichi Ganiyamur School ,Chennai ,Chennai High Court ,Kaniyamur School ,Kallakkirichi ,Kaniyamur School of ,Kallakkurichi ,District ,Kolakkurichi Kaniyamur School ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...