×

நெல்லையில் இருந்து 72 ஆடல் மகளிரை நாஞ்சில் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்; களக்காட்டை தலைநகராக கொண்டு தென்திருவிதாங்கூரை ஆண்ட தளபதி திருவடி: வரலாற்று ஆய்வில் புதிய தகவல்கள்

நெல்லை: களக்காட்டை தலைநகராக கொண்டு நெல்லை மற்றும் தென்திருவிதாங்கூரை ஆண்ட தளபதி திருவடி குறித்தான புதிய தகவல்கள் வரலாற்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் சரித்திர உண்மைகளை ஆய்வு செய்யும் வகையில் ‘திருநெல்வேலி வரலாற்றுத் தேடல் குழு’ உருவாக்கப்பட்டது. இக்குழுவினர் ‘தென்பாண்டி நாட்டு மரபு நடை’ என்னும் வரலாற்று சுற்றுலாவினை முதன்முறையாக மேற்கொண்டனர். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கிய சுற்றுலாவின் முதல் நிகழ்வாக மேலச்செவல் ஆதித்த வர்ண ஈஸ்வரர் கோவில், திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில் ஆகிய இடங்களில் சிற்பக் கலை, நாயக்கர் காலத்தில் அரேபியர் மற்றும் நாயக்கர்கள் உடனான வணிகத்தினை குறிக்கும் சுவர் ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. திருப்புடைமருதூரின் பழைய பெயர் திருப்புடைய மருதில் என்றும், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. தொடர்ந்து களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் உள்ள திருவிதாங்கூர் மன்னர் உதய மார்த்தாண்டவர்மாவின் கேரள பாணி கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை குறித்து ஆராய்ச்சி செய்தனர்.  களக்காட்டை தலைமையிடமாக கொண்டு பாண்டியர் ஆட்சிக்கு பிறகு ஆட்சி செய்த திருவடி என்ற தளபதி குறித்து புதிய விபரங்கள் கண்டறியப்பட்டன. களக்காட்டை தலைநகராக கொண்டு திருவடி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் மற்றும் தென் திருவிதாங்கூர் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தையும் ஆட்சி செய்தார். இவர் ஆட்சிக் காலத்தில் ஏராளமான நீர் பாசன திட்டங்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டன. நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி சுற்றிலும் ஆங்காங்கே ஓடிய சிறு நதிகளை இணைத்து தாமிரபரணி ஆற்றோடு கலந்து பாசன வசதி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவுகள் தளபதி திருவடியின் கல்வெட்டுக்கள் நெல்லை மாவட்டம் மன்னார் கோவிலில் காணப்படுகின்றன. அதில் களக்காட்டினை அக்கரைச்சீமையான களக்காடு என்ற சோழகுல வல்லிபுரம் என்று குறிப்பிடுகின்றனர். தொடர்ந்து சேரர் கட்டிடக்கலையில்அமைந்த திருக்குறுங்குடி அழகிய நம்பி கோவிலில் சிறப்புகள் குறித்தும், ஊரின் பெயர் காரணம் குறித்தும் திருக்குறுங்குடி நம்பி கோவிலில் வைணவ பெரியார்கள் நம்மாழ்வார், பெரிய ஆழ்வார் உள்ளிட்டோர் பங்கேற்று மங்களா சாசனம் செய்விக்கப்பட்டது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான விளக்கத்தினை திருநெல்வேலி வரலாற்று தேடல் குழுவின் தலைவர் மாரியப்பன் இசக்கி மற்றும் நிர்வாகிகள் அளித்தனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள நான்கு தலங்களிலும் சேரர், சோழர், பாண்டியர்களின் ஆட்சிக் கால கல்வெட்டுகள், கட்டிடக்கலை குறித்து விரிவான கையேடு வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பெங்களூரு, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர்.இதுகுறித்து திருநெல்வேலி வரலாற்று குழுவின் தலைவர் மாரியப்பன் இசக்கி கூறுகையில், ‘‘தென்பாண்டி நாட்டு மரபு நடை குறித்த சுற்றுலாவில் எங்கள் குழுவிற்கு தளபதி திருவடி குறித்த பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. 15ம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்களின் ஆட்சிக்கு முடிவுக்கு வந்ததால், அதன் பின்னர் 200 ஆண்டு காலம் கழித்தே பிற்கால பாண்டியர்கள் தென்காசியை தலைநகராக கொண்டு ஆட்சிபீடம் ஏறினர். அதற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 1506ம் ஆண்டு முதல் 1531ம் ஆண்டு வரை களக்காட்டை தலைநகராக கொண்டு ஜெயதுங்க நாடு என்ற பெயரில் தளபதி திருவடி ஆண்டு வந்தார். அவர் நிறைய தானங்கள் செய்துள்ளார். கொல்லம் ஆண்டு 682 மாசி மாதம் மன்னார் ேகாவில் அழகிய ராஜமன்னார் கோயில் மற்றும் திருப்புடை மருதூர் கைலாசநாதர் கோயிலில் திருவிழா நடத்த அவர் ஆணை பிறப்பித்தது ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர் தொடங்கி ஆதிச்சநல்லூர் வரை அவர் ஆட்சி செய்தற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர் ஆட்சிக்காலத்தில் நெல்லையில் இருந்து 72 ஆடல் மகளிரை நாஞ்சில் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். தனது ஆட்சியில் ஊர்களை 15 பகுதியாக பிரித்து தலைவர்களை நியமித்தார். திருவடியின் உத்தரவுகள் கல்லிடைக்குறிச்சி, பாப்பான்குளம், மன்னார் கோயில் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.’’ என்றார்….

The post நெல்லையில் இருந்து 72 ஆடல் மகளிரை நாஞ்சில் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்; களக்காட்டை தலைநகராக கொண்டு தென்திருவிதாங்கூரை ஆண்ட தளபதி திருவடி: வரலாற்று ஆய்வில் புதிய தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nanjil ,Thiruvadi ,South ,Trivandrum ,Kalakkad ,South Trivandrum ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...