×

சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் பணிபுரிய அரசு அனுமதி

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி  நேற்று வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய   திரைப்பட தொழிலாளர்கள்  சம்மேளனம் (பெப்சி) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க 21.5.2020 அன்று நான் அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தேன். அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பு நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து அமைச்சர் என்னுடன் ஆலோசனை நடத்தினார். மேற்படி சங்கத்தினருடைய கோரிக்கையை ஏற்று, அதிகபட்சமாக 60 நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை இன்று (31.5.2020) முதல் நடத்த அனுமதி கொடுத்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

சென்னையில் படப்பிடிப்புகள் நடத்த மாநகராட்சி ஆணையரிட மும், பிற மாவட்டங்களில் படப் பிடிப்பு நடத்த சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் ஒவ்வொரு  சின்னத்திரை தொடர் முழு படப்பிடிப்புக்கும் ஒருமுறை மட்டும் முன்அனுமதி பெற வேண்டும். சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதை உறுதி செய்துகொண்டு படப்பிடிப்புகள் நடத்த வேண்டும்.

Tags : Government ,screen shootings ,
× RELATED தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின்...