×

பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல் அடுத்தடுத்த சாலை மறியலால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு-விருத்தாசலம் ஏஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தை

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் வயலூர் மற்றும் சின்னவடவாடி பகுதியை சேர்ந்த மாணவர்களுக்குள் நேற்று முன்தினம் கோஷ்டி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை பள்ளி ஆசிரியர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இது சம்பந்தமாக மாணவர்கள் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சின்னவடவாடி மாணவர்கள், சின்னவடவாடியில் இருந்து விருத்தாசலம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது வயலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, வயலூர் மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது பஸ் படிக்கட்டில் ஏறும்போது இருதரப்பு மாணவர்களுக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து சின்னவடவாடி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி வயலூர் மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சின்னவடவாடி மாணவர்களின் உறவினர்கள் அங்கு வந்தபோது, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் சின்ன வடவாடி மாணவர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து விருத்தாசலம் ஏஎஸ்பி அங்கித் ஜெயின், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதன் பேரில் வயலூரை சேர்ந்த 3 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்நிலையில், வயலூர் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம், நகர செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்திய போது, பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் தொடர்பே இல்லாத 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதை தொடர்ந்து ஏஎஸ்பி அலுவலகத்தில், ஏஎஸ்பி அங்கித் ஜெயின் தலைமையில் இரு தரப்பினருக்கும் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தற்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் கூறி இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இரு தரப்பினரும் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் நேற்று சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்….

The post பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல் அடுத்தடுத்த சாலை மறியலால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு-விருத்தாசலம் ஏஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Virudhachalam ,ASP ,Vriddhachalam ,Vriddhachalam Government Boys Higher Secondary School ,Vayalur… ,Dinakaran ,
× RELATED எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி