×

கேரக்டருக்காக தீட்சை வாங்கிய நடிகர்!

சினிமாவுக்காக தீட்சை வாங்கியதாக சொல்கிறார் ஷபிபாபு. சமீபத்தில் வெளிவந்த ‘சண்டிமுனி’ படத்தில் பிரதான வேடத்தில் நடித்தவர். அவரிடம் பேசினோம்.

உங்க பின்னணி என்ன சார்?

எனக்கு சொந்த ஊர் சென்னைக்கு அருகே இருக்கும் வண்டலூர். ஜூ இருக்கும் ஊர் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஸ்கூல் படிக்கும்போதே டிராமாவில் ஆர்வம் அதிகம். என்னைப் பாதித்த நடிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். குறிப்பிடும்படியாக எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல் ஆகியோர் என்னை அதிகம் இம்ப்ரஸ் பண்ணியவர்கள். ரஜினி சாரின் ‘தளபதி’ படத்தை 25 முறையாவது பார்த்திருப்பேன்.

சினிமாவுக்கு வந்தது எப்படி?

சினிமாவில் நடிப்பதற்கு முன் சினிமா எப்படி எடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தேன். அதற்காக விடியற்காலையில் என் வீட்டிலிருந்து புறப்பட்டு 6 மணிக்கெல்லாம் ஏ.வி.எம். ஸ்டூடியோ வாசலில் ஆஜராகிவிடுவேன். லைட்மேன், புரொடக்‌ஷன் உதவியாளர்களை ஃப்ரெண்ட் பிடித்து படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே போய் தூரமாக நின்று படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பேன். அப்போது பாவை என்பவரும், இப்போது சினிமாவில் பிரபலமாக உள்ள காமெடி நடிகர்களும் நண்பர்களானார்கள்.

பல வேளைகளில் சாப்பிட பணம் இருக்காது. அப்போது ரமேஷ் என்ற டைலர் எங்களுக்கு உணவு கொடுத்து எங்கள் பசியை ஆற்றியதை மறக்க முடியாது. என்னுடைய முயற்சிக்கு பலனாக அட்மாஸ்ஃபியரில் நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதே சமயத்தில் ‘சித்தி’, ‘மங்கை’ போன்ற தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் சொல்லும்படி பெரிய கேரக்டர் கிடைத்தது.

சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தில் பார்த்திபன் சார் காம்பினேஷனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இப்போது ‘ஜருகண்டி’ படத்தை இயக்கியுள்ள பிச்சுமணி வாங்கிக் கொடுத்தார். இயக்குநர் வெங்கட் பிரபு சார் டீமில் எந்த புதுமுக நடிகர்களும் பயமில்லாமல் நடிக்கலாம். அவ்வளவு ஃப்ரீடம் தரக்கூடிய டைரக்டர்.

உங்களுக்கு ‘சண்டிமுனி’ லைஃப்டைம் கேரக்டர் இல்லையா?


நிச்சயமாக. அந்த கேரக்டரைப் பார்த்த பிரபல நடிகர்கள் சிலர், ‘ச்சே... எங்களுக்கு மிஸ் ஆயிடிச்சே’ என்று என்னிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். அந்தப் படத்தின் இயக்குநர் மில்கா என்னுடைய நீண்ட நாள் நண்பர். இதே படத்தை  குறும்படமாக எடுத்தார். அதிலும் நான் மந்திரம் ஓதும் ‘பாய்’ கேரக்டரில் நடித்தேன். என்னுடைய நடிப்புக்கு அங்கீகாரமாக படத்திலும் எனக்கு அதே வாய்ப்பு கொடுத்தார். சாமியார் வேடத்துக்காக ஒரு மகானிடம் முறைப்படி இரண்டு வருடம் மந்திர தந்திரங்கள் கற்றுக்கொண்டு தீட்சை வாங்கினேன். மாந்திரீகத்துக்கு என்று நெறி இருக்கிறது. அதன்படி எனக்கு மாந்திரீகம் தெரிந்தாலும் அறநெறியுடன்தான் பயன்படுத்தினேன்.

ஹீரோ நட்டி?

நட்டி சார் ரொம்பவும் சிம்பிள் பெர்சன். ஆரம்பத்தில் அவருடன் நடிக்க பயந்தேன். சக நடிகர்களை உற்சாகப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. எனக்காக சில கம்பெனிகளிலும் சிபாரிசு பண்ணினார்.

அடுத்து?

22 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். நான் மனச்சோர்வு அடைந்த வேளைகளில் என் மனைவியும் குடும்பமும்தான் எனக்கு உற்சாகம் கொடுத்தார்கள். இப்போது மில்கா இயக்கும் புதிய படம் உட்பட நான்கைந்து படங்களில் பெரிய ரோல் கிடைத்துள்ளது. சினிமாவில் ஹீரோவாக நடிக்க வந்தேன். சில படங்கள் என் கை நழுவிப்போனதும் உண்டு. ஆனால் காலம் கடந்துபோனதால் இப்போது கேரக்டர் ரோல்தான் வருகிறது. அந்த வகையில் வில்லன், குணச்சித்திர நடிப்பில் பெயர் வாங்க வேண்டும்.

சினிமாவை வாழ்க்கையென்று கருதி சென்னைக்கு வருபவர்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?

அட்வைஸெல்லாம் சொல்லுமளவுக்கு நான் பெரிய ஆள் அல்ல. என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். நடிக்கும் ஆசையில் பலர் வருகிறார்கள். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு இந்த மூன்றும் இருந்தால் வாய்ப்பு நிச்சயம். இதில் லக் இருக்கிறவர்கள் பெரிய ஸ்டாராக மாறுகிறார்கள். ஏனெனில், என்னுடன் ஒரே சமயத்தில் வாய்ப்பு தேடியவர்கள் இன்று முன்னணி நடிகர்களாக, இயக்குநர்களாக இருக்கிறார்கள். ஆனால் யாரிடமும் நான் வாய்ப்பு கேட்கவில்லை.  இயக்குநர் மில்காவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர் இல்லையென்றால் இன்னும் கம்பெனி கம்பெனியாக ஏறி நின்று வாய்ப்புக்காகக் காத்திருந்திருப்பேன்.

Tags : Actor ,character ,
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி