×

ஆக்‌ஷனில் மாஸ் காட்டுகிறார் பரத்!

மீண்டும் பிஸியாகி இருக்கிறார் ‘காதல்’ பரத். ‘காளிதாஸ்’ படத்தின் அட்டகாசமான வெற்றிக்குப் பிறகு தெம்பாகி இருக்கிறார். பாலிவுட்டிலும் தடம் பதிக்கிறார். ஏற்கனவே மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கும் அவருக்கு, இப்போது அங்கேயும் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. தமிழ், மலையாளம் இருமொழிகளில் பரத் நடிக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்கிற படத்துக்கு அங்கே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. படத்தை இயக்கும் சுனிஷ்குமார், ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தவர். சுனிஷிடம் பேசினோம்.

தலைப்பே ஆங்கிலப் படத் தலைப்பு போன்று இருக்கிறதே...?

படமும் அப்படித்தான். வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய கொள்ளை ஒன்றை அடித்து விட்டு வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதற்கு தங்கள் துறை சார்ந்த அறிவை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். ஆறு மணி நேரத்தில் அந்த கொள்ளை திட்டத்தை முடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்படும் டார்கெட். அதை செயல்படுத்தும்போது அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அந்த சம்பவம் என்ன? திருடச் சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி உள்ளோம்.

பரத்?

தயாரிப்பாளர் அனூப் காலித் துபாயில் தொழில் அதிபர். அவருடன் பலர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஒருவரான தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ் இந்தக் கதையை எழுதினார். கதை அனூப் காலித்துக்கு பிடித்துவிடவே சினிமாவாக எடுக்க விரும்பினார். சுரேஷுக்கு இயக்குனர் அனுபவம் இல்லை என்பதால் என்னை அணுகினார்கள். கதையைக் கேட்ட உடனே இந்த கேரக்டருக்கு பரத்தான் சரியான சாய்ஸ் என்பதை சொன்னேன். ஃபிட்டான, ஒரு சிக்ஸ் பேக்ஸ் ஹீரோ தேவை. காரணம், அவ்வளவு சாகசங்கள் படத்தில் இருக்கிறது.

அதை ஒரு ஹீரோ செய்தால் ரசிகர்கள் அதனை ஏற்க வேண்டும். அப்போது பரத் ‘கடுகு’ படத்தில் பாடி பில்டராக நடித்திருந்தார். அந்தப் படத்தைப் பார்த்து அவரை தேர்வு செய்தோம். அவரும் கதை கேட்ட உடன் ஒப்புக் கொண்டார். அதோடு பரத் காதல், எம் மகன் படங்களின் மூலம் மலையாள ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இப்போது பெரிய படங்களிலும் நடிக்கிறார். அதனால் இரு மொழிகளுக்கும் பொதுவான நடிகராக அவர் இருப்பதால் அவரைத் தேர்வு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே நேர்த்தியாக நடித்துக் கொடுத்தார்.

இப்படியான ஒரு கதையில் ஹீரோயினுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கும்?

மலையாளம், தெலுங்கு படங்களில் வளர்ந்து வரும் விவியா சந்த் இதில் ஹீரோயின். பரத்தின் கூட்டத்தில் அவரும் ஒருவர். தனியாக காதல், ரொமான்ஸ் எதுவும் இல்லை. ஆனால் கதையின் போக்கில் பரத்துக்கும், விவியாவுக்குமான காதல் மெலிதாக சொல்லப்பட்டிருக்கும். அதேபோல ஒரு வில்லன் கேரக்டருக்கு ஆள் தேடியபோது கதைக்கு ஏற்ற தோற்றத்தில் இருந்த தயாரிப்பாளர் அனூப் காலித்தையே நடிக்க வைத்து விட்டோம்.

லஜ்ஜாவதியே பாடல் மூலம் பரத் கேரளாவில் பாப்புலர். இதில் அப்படியான விஷயம் இருக்கிறதா?

படத்திற்கு பாடலோ, நடனமோ தேவையில்லை. இருந்தாலும் ஓரிரு பாடல்கள் உண்டு. வலிந்து பாடலையோ, நடனத்தையோ திணித்தால் கதையின் போக்கு கெட்டுப்போய்விடும். இந்தப் படத்தில் பரத் செய்திருக்கும் ஆக்‌ஷன் பெரிய அளவில் பேசப்படும்.

Tags : Bharat ,Mass ,
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்