×

ஆக்‌ஷன் கிங்கின் கதை!

பெங்களூரில் இருந்த தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ராஜ்குமார் ஹீரோ. மிகவும் உருக்கமாக நடித்திருந்தார். படம் பார்த்த அந்த டீனேஜ் இளைஞன் அப்படியே அவரது நடிப்பில் உருகிவிட்டான். படம் முடிந்தவுடன் அதே நினைப்பில் வீட்டுக்கு வருகிறான். அவனுடைய அப்பா கேட்டார். படம் எப்படிடா இருக்கு?

ராஜ்குமார் ஆக்டிங் சன்னிகி மதிதா கன்னடத்தில் பதில் சொன்னான்.அருகே அழைத்தார். அவன் எதிர்பாராத நொடியில் கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது. மண்டைக்குள் பொறி பறந்தது. படம் பார்த்ததற்காக நிச்சயமாக அப்பா அடித்திருக்க மாட்டார். ஏனெனில், அவரே கன்னடத்தில் பிரபலமான சினிமா நடிகர். எதற்காக அடியென்கிற கேள்வியை கண்களில் தேக்கி, பரிதாபமாக அப்பாவைப் பார்த்தான் அந்த இளைஞன்.
கர்நாடகமே கடவுள் என்று மதிக்கக்கூடிய ஒரு மனிதரை ஒருமையில் எப்படி நீ விளிக்கலாம்?

அதாவது, ‘ராஜ்குமார் நல்லா நடிச்சிருக்காப்புளே’ என்று சொன்னதால் விளைந்த கோபம் அது. ‘நடிச்சிருக்காரு’ன்னு சொல்லணும். ‘ர்’ விகுதி எப்படி மிஸ் ஆகலாம் என்பதால்தான் அந்த ‘பளார்’.அப்பாவிடம் அப்போது வாங்கிய அடி இன்றுவரை ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. பெரிய ஹீரோ ஆனபிறகும்கூட தன்னைவிட வயது குறைந்தவர்களையும் அவர் மரியாதையாக விளிப்பது என்பது அவரது அப்பா சக்தி பிரசாத் கற்றுக் கொடுத்த பண்பு.

அர்ஜுனின் இயற்பெயர் சீனிவாச சர்ஜா. வீட்டில் அசோக் பாபு என்று கூப்பிடுவார்கள். 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, நடிகர் சக்தி பிரசாத் - லட்சுமி தம்பதியரின் இளைய மகனாகப் பிறந்தார். சுதந்திரநாளில் பிறந்ததாலோ என்னவோ, இவரை போலீஸ் அதிகாரியாக்கி நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது அவரது அப்பாவின் கனவு.

சிறுவயதிலிருந்தே கடுமையான உடற்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். பள்ளி நாட்களிலேயே ‘என்டர் தி டிராகன்’ ப்ரூஸ்லீ மாதிரி கட்டழகனாக வளர்ந்தார் அசோக் (அதாவது இன்றைய ஆக்‌ஷன் கிங்).
போலீஸ் என்றால் ஊரைத்தான் காக்க முடியும், இராணுவ வீரன் என்றால் நாட்டையே காக்கலாம் என்று அசோக்குக்கு தோன்றியது. அப்பாவிடம் சொன்னார். தான் எட்டு அடி பாயச் சொன்னால், மகன் எண்பது அடி பாய விரும்புகிறான் என்பதில் அவருக்கு மகிழ்ச்சி. உடனே சம்மதித்தார்.

ஆனால், இராணுவத்தில் சேர தாயாரின் ஒப்புதலும் அவசியம். அம்மாவுக்கு இவரைப் பிரிய விருப்பமில்லை. அழுதவாறே விண்ணப்பத்தில் கையெழுத்திட மறுத்தார்.கனவு நிறைவேறாத ஏக்கம். அதே நேரம் தாய் சொல்லையும் தட்ட முடியாத தவிப்பு. அப்போது அசோக்குக்கு வயது பதினேழுதான். அடுத்தது என்னவென்று முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.சாலையில் ஒருமுறை நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அவரை ஒரு கார் மறித்தது.

நீ சக்தி பிரசாத் சாரோட சின்னப் பையன்தானே? சார் உன்னை ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரு.
‘அப்பா அதுபோல படப்பிடிப்புக்கு எல்லாம் அழைக்க மாட்டாரே?’ என்கிற குழப்பத்தோடுதான் காரில் ஏறினார் அசோக்.
கார் நேராக ‘கலிங்க சர்ப்பா’ என்கிற படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்துக்கு விரைந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்பாவை அசோக்கின் கண்கள் தேடின. அவரைக் காணோம்.

இயக்குநர் ராஜேந்திரசிங் பாபுதான் அங்கே இருந்தார்.சட்டையைக் கழட்டு.இவர் கழற்றியவுடனேயே, ஜாக்கிசான்னு ஒரு புதுப்பையன் சைனீஸ் படங்களிலே செம போடு போடுறான். அவனை மாதிரியே பாடி உனக்கு என்றவர், என்னோட படத்துலே நடிக்கறீயான்னு உங்கிட்டே பர்மிஷனெல்லாம் கேட்கப் போறதில்லை. உங்கப்பாகிட்டே பேசிட்டேன். நீ நடிக்கறே என்று அன்பாக ஆணையிட்டார்.

அதுநாள் வரை சினிமாவில் நடிப்பதைப் பற்றி எந்த ஐடியாவும் இல்லாத அசோக், அப்பாவே சம்மதித்துவிட்டார் என்பதால் அரைகுறை மனசோடு தலையசைத்தார்.அதே குழப்பத்தோடு வீட்டுக்கு வந்தார்.அப்பா, நான் நடிக்கிறதுக்கு நீங்க சம்மதிச்சிட்டதா டைரக்டர் ராஜேந்திரசிங் சொன்னாரு. நான் ஒத்துக்கிட்டேன் என்றார்.நான் அவருகிட்டே உன்னைப் பத்தி பேசுனதே இல்லையே! என்று அப்பா சொன்னபோதுதான், தந்திரமாக தன்னை டைரக்டர் வளைத்துப் போட்டதே அசோக்குக்கு தெரியவந்தது. இருந்தாலும் ஒப்புக் கொண்டு வந்துவிட்டோமே என்று மேலும் குழம்பினார்.

அப்பாதான் தெளிவாக்கினார்: உன்னாலே இந்தத் துறையிலே ஏதாவது சாதிக்க முடியும்னு நம்பிக்கை இருந்திச்சின்னா, பயப்படாம நடிக்கப் போ. ஆனா, என்னிக்குமே நீ பத்தோடு பதினொண்ணா மட்டும் இருந்துடக் கூடாதுங்கிறதை மனசுலே வெச்சுக்கோ!

தன்னால் எந்தத் துறையிலும்  சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை அசோக்குக்கு இருந்தது. தைரியமாக படப்பிடிப்புக்குப் போனார். அசோக் என்கிற பெயரோ சீனிவாச சர்ஜா என்கிற பெயரோ டைரக்டர் ராஜேந்திரசிங்குக்கு பிடிக்கவே இல்லை. அவர்தான் அர்ஜுன் என்கிற ஸ்க்ரீன்நேமை இவருக்கு உருவாக்கினார். அந்தப் படம் ‘சிம்மதா மாரி சைன்யா’ (குத்துமதிப்பாக ‘சிங்கப் படை’ என்று புரிந்துகொள்வோம்).

அந்தப் படத்தில் நடிக்கும்போது அர்ஜுனுக்கு பத்தொன்பது வயது என்றாலும், டைட்டிலில் ‘மாஸ்டர்’ அர்ஜுன் சர்ஜா என்றுதான் பெயர் போட்டார்கள்.பிரபல பாலிவுட் நடிகர் அம்ரிஷ்பூரி வில்லன். அவர் இரண்டு குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் காட்டில் வைத்திருப்பார். அர்ஜுன் தலைமையிலான இளைஞர் படை, காட்டுக்குள் படையெடுத்து வில்லனை வீழ்த்தி குழந்தைகளைக் காப்பாற்றும் கதை.

சீனப் படங்களைப் போலவே படம் முழுக்க ஆக்‌ஷன்தான். படத்தில் ஒரு காட்சியில் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கிக் கொண்டே வந்து ரயில் மீது அர்ஜுன் குதிக்க வேண்டும். ஷாட் சிறப்பாக வரவேண்டுமென்றால் 500 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரின் கீழே இருக்கும் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அர்ஜுன் நடிக்கவேண்டும். இப்போதுபோல கம்பிகளைக் கட்டிக்கொண்டு ஸ்டண்ட் செய்யக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் 1980ல் இல்லை.

‘டூப் போடலாமா?’ என்று ஸ்டண்ட் டைரக்டர் கேட்டபோது, இளங்கன்று அர்ஜுன் பயமில்லாமல் ‘நானே செய்கிறேன்’ என்று முன்வந்தார். வாட்டமாக பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு ஹெலிகாப்டரின் கம்பி வாகாக இல்லை. 500 அடி உயரத்தில் கைகள் வழுக்க, எப்படியோ சமாளித்து நடித்தார். ஆர்வத்தில் ஒப்புக்கொண்டாரே தவிர, படப்பிடிப்பின்போது அவருக்கு ஏற்பட்ட படபடப்பு இன்றுகூட அடங்கவில்லை. மரணதேவனை அருகில் பார்த்து ‘ஹாய்’ சொல்லிவிட்டு வந்தேன் என்கிறார். ஏனெனில், இந்தப் படத்தின் மலையாளப் பதிப்பில் ஜெயன் என்கிற நடிகர் இதேபோல ஹெலிகாப்டரில் ஸ்டண்ட் செய்யும் காட்சியில் நடிக்கும்போது மேலே இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.

‘சிம்மதா மாரி சைன்யா’ வெளியாகி அர்ஜுனை கவனிக்க வைத்தது. அடுத்து ‘ஆஷா’, ‘பூஜாபலா’, ‘பிரேமஜோதி’ என்று வரிசையாக கன்னடத்தில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த கன்னடப் படம் ஒன்றினைப் பார்த்த இயக்குநர் இராம.நாராயணன், தான் எடுக்க உத்தேசித்திருந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படம் ஒன்றில் நடிக்க அர்ஜுனை அழைத்தார். அதுதான் ‘நன்றி’. கார்த்திக்கோடு இணைந்து நடித்த அந்தப் படம் ஓவர்நைட்டில் அர்ஜுனை பிஸியாக்கியது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று அடுத்தடுத்து எட்டு படங்களை ஒரே நேரத்தில் ஒப்புக்கொண்டு நடித்தார். ஒரு நாளைக்கு ஏழு ஷிஃப்டுகளாக கால்ஷீட் கொடுத்து, தூங்கவோ, சாப்பிடவோ நேரமின்றி எந்நேரமும் காமிரா முன்பாகவே, ஷூட்டிங் விளக்குகளின் சூடான மஞ்சள் ஒளியில் நடித்துக்கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இதேதான் நிலை.

கதை கூட கேட்காமல், வருகிற வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொண்டு மெக்கானிக்கலாக நடித்துக் கொண்டிருந்ததால், அவர் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் அடுத்தடுத்து தோல்வியடையத் தொடங்கின. வற்றிய குளத்தை கொக்குகள் வட்டமிடுமா என்ன? அர்ஜுனின் கால்ஷீட் கிடைக்காதா என்று தவம் கிடந்தவர்கள் காணாமல் போனார்கள். கிட்டத்தட்ட ஓராண்டு வீட்டில் சும்மாவே முடங்கிக் கிடந்தார். முப்பது வயதுக்குள்ளாகவே தான் முடிந்து விட்டோமோ என்கிற கேள்வி அவருக்கு முன்பாக விஸ்வரூபம் எடுத்து நின்றது. அப்பா சொன்ன அட்வைஸ் எக்கோ அடித்தது. ஏதாவது சாதிக்க முடியும்னு நம்பிக்கை இருந்திச்சின்னா…தன்னால் சாதிக்க முடியும் என்று மீண்டும் நம்பினார்.

என்னை வைத்து படமெடுக்க எந்த தயாரிப்பாளரும் இல்லையா? நானே தயாரிக்கிறேன். என்னை வைத்து படமெடுக்க பெரிய இயக்குநர்கள் யாரும் விரும்பவில்லையா? நானே இயக்குகிறேன். நானே நடிக்கிறேன். நான் யார் என்பதை நிரூபிக்கிறேன். அதுதான் ‘சேவகன்’. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் பணப்பற்றாக்குறை.

உடலளவிலும், மனதளவிலும்  பெரிதும் சோர்ந்துபோயிருந்தார். ஒரு ஸ்டண்ட் காட்சியை எடுக்கும்போது, என்னால் படமே எடுக்க முடியாது என்று நொந்துபோய் அப்படியே படத்தை நிறுத்திவிடலாமா என்று யோசிக்குமளவுக்கு கடுமையான மன உளைச்சல். திடீரென்று ஏதோ பொறி தோன்றியது. பரபரவென வேலை பார்த்தார். அந்த சண்டைக்காட்சி மிகவும் பிரமாதமாக அமைந்தது. எப்படியோ படத்தைத் தயார் செய்துவிட்டு, விநியோகஸ்தர்களுக்கு போட்டுக்காட்ட அழைத்தார்.

பணம், உழைப்பு, அறிவு அத்தனையையும் கொட்டி அவர் எடுத்த ‘சேவகன்’ படத்தை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை. அவரது முந்தைய தோல்விப்படங்களை சுட்டிக்காட்டி, ‘அர்ஜுன் நடிச்ச படமே ஓடலை, கூடவே டைரக்டும் பண்ணினா எப்படிங்க?’ என்று பின்னால் போய் ஏகடியம் பேசினார்கள். ரிஸ்க் எடுத்து அர்ஜுனேதான் வெளியிட்டார். படம் ஹிட்.‘சேவகன்’, அவருக்கு இன்னொரு வாசலையும் திறந்துவைத்தான்.

யெஸ்.‘சூரியன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பவித்ரன்- தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் கூட்டணி உடைந்தது. பவித்ரனிடம் உதவியாளராக இருந்த ஷங்கரை வைத்தே படமெடுத்து ஜெயிக்க கே.டி.குஞ்சுமோன் ஆவேசமாக சபதமிட்டிருந்தார். ஷங்கர், தான் இயக்கப் போகும் முதல் படத்துக்கு தனக்கு நன்கு அறிமுகமான ஹீரோவான சரத்குமாரையே ஒப்பந்தம் செய்திருந்தார்.

இதற்கிடையே கே.டி.குஞ்சுமோன் இல்லாமலும் தன்னால் வெற்றிப்படம் இயக்க முடியுமென்று நிரூபிக்க பவித்ரன் மெனக்கெட்டுக்கொண்டி ருந்தார். ஜி.கே.ரெட்டி (விஷாலின் அப்பா) தயாரிப்பில் ‘ஐ லவ் இந்தியா’ படத்துக்கு அவர் சரத்குமாரைத் தள்ளிக்கொண்டு போக, ஷங்கர் தன் படத்துக்கு நல்ல ஹீரோ கிடைக்காமல் தவித்தார்.

யதேச்சையாக சினிமா டைரக்டரி ஒன்றைப் புரட்டினார் ஷங்கர். அதில் ‘A’ வரிசையில் அர்ஜுன் பெயரைப் பார்த்தார். அப்போதுதான் ‘சேவகன்’ வெளியாகி ஆடியன்ஸிடம் நல்ல ரெஸ்பான்ஸ். ‘நல்ல நடிகர் ஆயிற்றே! ஆக்‌ஷனிலும் அமர்க்களப்படுத்துவார். இவரை ஏன் நம் படத்தில் நடிக்க வைக்கக்கூடாது?’ என்று அவருக்குத் தோன்றியது. கே.டி.குஞ்சுமோன் ‘ஓக்கே’ சொல்லிவிட அர்ஜுன் ஒப்பந்தமானார். அந்தப் படம்தான் ‘ஜென்டில்மேன்’. இப்படத்தின் வெற்றியைப் பற்றியும், அதன்பிறகு அர்ஜுன் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமாகக் கோலோச்சியதையும் தனியாக உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமா?

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!