×

விருத்தாசலம் ஆலடி சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரம்-எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திரண்டதால் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் ஆலடி சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் கடலூர் ரோடு இந்திரா நகரில் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகள் மற்றும் ஆலடி சாலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணியில் விருத்தாசலம் தாசில்தார் தனபதி தலைமையிலான வருவாய் துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 16ம் தொடங்கிய இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்திரா நகர் மற்றும் ஆலடி ரோடு பகுதி மக்கள் குடியிருக்கும் வீடுகளை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இடிப்பதற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்திரா நகர் பகுதியில் 50 சதவீத கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் ஆலடி பகுதியில் உள்ள கட்டிடங்களை இடிப்பதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று சமூக நல தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே ஆலடி ரோட்டில் உள்ள பிரபல சினிமா தியேட்டரில் டிக்கெட் கவுண்டர் நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருந்தால் அதனை இடிக்கும் பணி நடந்தது. மேலும் அப்பகுதியில் குடியிருப்பு வீடுகளை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் திரண்டனர். ஆனால் அவர்களை விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயின், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்….

The post விருத்தாசலம் ஆலடி சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரம்-எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhachalam Alladi Road ,Vridthachalam ,Vridthachalam Aladi Road ,Virudhachalam Aladi Road ,Dinakaran ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி