×

டைரக்டர் ஆகிறார் மியூசிக் டைரக்டர்!

இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடிக்கும் சீசனில் டைரக்‌ஷன் பண்ண வந்துள்ளார் ஞானி. இவர் இயக்கும் படத்தின் பெயர் ‘ஊர் சுற்றும் வாலிபன்’. படத்தைப் பற்றி இயக்குநர் ஞானியிடம் கேட்டோம்.‘‘எனக்கு சொந்த ஊர் கடலூர் பக்கத்தில் உள்ள நெல்லிக்குப்பம். என்னுடைய தாத்தா வித்வான். மைசூர் மகாராஜாவிடம் வயலின் வாசித்த செளடையாவின் சீடர். சிறுவயதிலேயே பியானோ, கிடார், பேங்கோஸ் என்று ஏராளமான இசைக் கருவிகள் வாசிக்க கற்றுக்கொண்டேன்.

இதுவரை சுமார் இரண்டாயிரம் எபிசோடுகளுக்கு இசையமைத்துள்ளேன். 750 கிறிஸ்தவ ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளேன். இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி உள்ளிட்ட பல இயக்குநர்களின் விருது படங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்துள்ளேன்.
இசையமைப்பாளராக அக்கட தேசத்தில்தான் முதல் வாய்ப்பு கிடைத்தது. ‘ரவிகிரகணம்’, ‘ஆவேசம்’ என்று சில படங்கள் பண்ணினேன். அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் ‘இசைப் பயணம்’ என்னுடைய முதல் படம். விஜயகுமார், ரகுமான், சார்லி,  நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருந்தார்கள். தொடர்ந்து ‘நிலவில் களங்கமில்லை’, ‘கொஞ்சும் மைனாக்களே’ என்று சில படங்கள் பண்ணினேன்.

ஒரு கட்டத்தில் ‘பூமாலையே தோள் சேரவா’ என்ற படத்தை சொந்தமாக ஆரம்பித்தேன். ஆனால் சில காரணங்களால் தொடர முடியவில்லை. பிழைப்புக்காக லிபியாவுக்கு வேலைக்குப் போனேன். மீண்டும் சினிமா எடுக்க முயற்சித்தேன். அப்படி எழுதிய கதைதான் ‘ஊர் சுற்றும் வாலிபன்’.
இது முழுக்க முழுக்க காமெடி கதை. படிக்க முடியாத ஹீரோ, எதிர்காலத்தில் தனது உழைப்பால் உயரத்திற்குச் செல்வதோடு, முக்கிய பிரமுகராகவும் உருவெடுக்கிறார். அது எப்படி என்பதை காதல், காமெடி கலந்து சொல்லியுள்ளேன்.

நாயகன், நாயகிகள் அனைவரும் புதுமுகங்கள். திரிபுரா, ஜார்க்கண்ட், கர்நாடகா, ஆந்திரா என்று 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நாயகிகளாக நடிக்கிறார்கள்.  படத்தில் மொத்தம் 7 பாடல்கள். வைகைச் செல்வன், சூர்யதாஸ், காதல்மதி ஆகியோருடன் நானும் பாடல் எழுதியுள்ளேன். மோசஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கல்விமுறை குறித்து நான் சொல்லும் தீர்வுக்கு சமூகத்தில் சிறிய மாற்றம் வந்தால், அதையே எனக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்வேன்’’ என்றார்.

Tags : Music Director ,
× RELATED சாலை விபத்தில் இறந்ததாக கருதப்படும்...