×

திருச்சியில் அடுத்தாண்டு அரசு பல் மருத்துவமனை ஆயுர்வேத கல்லூரி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருச்சி: திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.12லட்சம் மதிப்பீட்டில் உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.  32 படுக்கைகளுடன் கூடிய இ.சி.ஆர்.பி. தீவிர சிகிச்சை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை இயந்திரத்தை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: திருச்சிக்கு அரசு பல் மருத்துவமனை ஒன்று வேண்டும். அதை நிழல் அறிக்கையில் மட்டும் சேருங்கள். நிதியை நான் முதல்வரிடம் கேட்டு பெற்றுக்கொள்கிறேன் என்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: திருச்சி அரசு மருத்துவமனை பிறவி காது கேளாத 82 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.  துறையின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மையும், நேர்மையும் வேண்டும் என  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்  அடிப்படையில் தான்  கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்கு காரணம் இரு மருத்துவர்கள் என்று அறிக்கை வந்தவுடன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 5,430 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது. கவன குறைவு, அலட்சியப்போக்கு போன்றவற்றால் அறுவை சிகிச்சை மரணங்கள் ஏற்பட கூடாது என்கிற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். அறுவை  சிகிச்சைக்கு செல்வதற்கு முன் என்னென்ன மருத்துவ கருவிகள், மருந்துகள்,  அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்  அறுவை சிகிச்சை அரங்கில் உள்ளது  என்பதை தெரிந்து கொள்ள அறுவை சிகிச்சை அறை முன்பு செக் லிஸ்ட் போர்டு திருச்சியில் வைத்துள்ளோம். விரைவில் 1,646 அறுவை சிகிச்சை அரங்கு முன் செக் லிஸ்ட் போர்டு வைக்கப்படும். இதுபோன்று ஏற்பாடு இந்தியாவில் இதுவே முதல் முறை. திருச்சியில் அரசு பல் மருத்துவமனை அமைக்க  நிழல் அறிக்கையில் முதல்வரின் ஆலோசனை பெற்று இடம் பெறும். அடுத்த ஆண்டு திருச்சியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியும் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும். தமிழகத்தில் புதிதாக 708 நகர்நல வாழ்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில்அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியால் திருச்சியில் மட்டும் 36 மையங்கள் அமைய இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் எம்பி திருநாவுக்கரசர், கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், ஸ்டாலின்குமார், சவுந்தரபாண்டியன், அப்துல் சமது, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்….

The post திருச்சியில் அடுத்தாண்டு அரசு பல் மருத்துவமனை ஆயுர்வேத கல்லூரி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Dental Hospital Ayurvedic College ,Trichy ,Minister ,M. Subramanian ,K.A.P. ,Viswanatham Government Medical College Hospital ,Subramanian ,Dinakaran ,
× RELATED பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை...