×

ஜிப்ஸி

ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், சன்னி வேய்ன்,  லால் ஜோஷ் , உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஜிப்ஸி‘.

காஷ்மீர் பார்டரில் நடக்கும் ஒரு சண்டை, அந்த சண்டையில் ஜிப்ஸியின்(ஜீவா) பெற்றோர்கள் கொல்லப்பட ஒரு குதிரைக்காரர் ஜிப்ஸியை தத்தெடுத்துத் தன்னுடன் தூக்கிச் செல்கிறார். அன்றிலிருந்து நாடோடியாக வாழும் ஜிப்ஸி தனது சீனியர் போலவே குதிரை வைத்து வித்தைக் காட்டும் தொழில் செய்கிறார். மேலும் ஊர் ஊராக பயணம் செய்யும் ஜிப்ஸி ஒருமுறை நாகூருக்கு வரும்பொழுது இவரைப் பார்த்து ஒரு இஸ்லாமியப் பெண் மீது காதல் கொள்கிறார். மேலும் ஜிப்ஸியுடனேயே அந்தப் பெண் வடநாட்டுக்குக் கிளம்பி வர திருமணமும் செய்துகொள்கிறார்கள். அங்கே மதக் கலவரம் கணவன் மற்றும் கருவுற்றிருக்கும் மனைவி சகிதமாக கலவரத்தில் சிக்கித் தனித் தனியே பிரிகிறார்கள். முடிவில் ஒன்றிணைந்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.

ஜீவா நல்ல நடிகர் என எப்போதோ நிரூபித்துவிட்டார் இந்தப் படத்திலும் அவருக்கான வேலையை அற்புதமாகச் செய்திருக்கிறார். குறிப்பாக நாடோடி கெட்டப்பிற்கு அவரின் அசால்ட் நடிப்பு நல்ல பொருத்தம். நாயகி நடாஷாதான் ஒரு சில இடங்களில் அழகாகத் தெரிகிறார். ஆனால் படம் முழுக்க சோக கீதம் வாசிக்கிறார். முகத்தில் என்ன சொல்ல முடியாத துயரம் என்றே புரியவில்லை. நடிப்பும் இன்னும் பயிற்சி தேவை. அதீத வசனம் இல்லாத காரணத்தால் பல இடங்களில் தப்பித்தார்.

படம் காதல் படமென்றாலும் மதக்கலவரம், யாரால் மதக்கலவரங்கள் வருகின்றன, இதில் முஸ்லிம் அல்லது இந்து அல்லாதோர் என்னென்ன இடைஞ்சல்களுக்கு ஆளாகின்றனர்.  எத்தனைப் பேருக்கு என்னக் கஷ்டம், மேலும் பிரச்னைகளை உருவாக்குவோரே வேலை முடிந்ததும் எப்படி நடத்தப்படுகின்றனர். இப்படி பல விஷயங்களை துணிச்சலாகவே படத்தில் எடுத்து வைத்திருக்கிறார் ராஜு முருகன்

எனினும் காதல் வருவதற்கான ஆழமான காட்சிகள் இல்லை, மேலும் ஒரு குதிரைக்காரன் மேல் எப்படி பார்த்தவுடன் காதல் வரும். போகும் இடமெங்கும் ஜீவாவுக்கு ராஜ உபச்சாரம் நடக்கிறது. எப்படி சாத்தியம்.

‘அவங்களுக்கு தேவைப்பட்டப்போ நான் அவங்க ஆளுங்க, வேலை முடிஞ்சதும் நான் அவங்கள்ல ஒருத்தன் இல்லை’…

இப்படியான பலமான சில வசனங்களும் படத்தில் பேசப்பட்டுள்ளன. குறிப்பாக மாட்டு இறைச்சி வாங்கும் காட்சிகள் தைரியமான காட்சியமைப்பு. பல சுவாரஸ்யமான காட்சிகள் சென்சார் பிடியில் சிக்கியதால் முன்பாதியில் சில காட்சிகளும், பின் பாதியில் பல காட்சிகளும் மெதுவாக நகருகின்றன.

சந்தோஷ் நாராயணன் இசையில் காஷ்மீர் காட்சிகள், கலவரக் காட்சிகள் என மேலும் உருக்கமாகவே தெரிகின்றன. எனினும் பாடல்களில் இன்னமும் உயிரோட்டம் கொடுத்திருக்கலாம். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவில் இந்தியா இன்னமும் அழகாகவே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதில் அவர்களின் காட்சிக்கான லோகேஷன் தேடல்களும் மெனெக்கெடல்களும் நன்றாகவே புரிகிறது.

மொத்தத்தில் ‘பம்பாய்‘ படத்திலேயே மணிரத்னம் இந்தக் மாதக்கலவர பிரச்னையை மிக அழகாக எடுத்து வைத்துவிட்டார். ஆனால் சமகால அரசியலும் சேர்த்துச் சொல்லிய விதத்தில் ‘ஜிப்ஸி‘ தவிர்க்க முடியாத படமாக நிற்கிறது.

Tags : Gypsy ,
× RELATED கணவன், மனைவி ஈகோ கதையில் அஞ்சலி நாயர்