×

நிறைவேற்றுமா ஒன்றிய அரசு?

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்காததால், நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கலான வழக்கில், ஒன்றிய அரசு தரப்பில் சில விஷயங்கள் கூறப்பட்டன. அதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக, ஜப்பான் கட்டுமான நிறுவனமான ஜிகா குழுவினர், கடந்த 2019ல் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். திட்ட மதிப்பு ரூ.1,977.8 கோடியாக உயர்ந்துள்ளது. 2022, மார்ச் 21 முதல் அக்டோபர் 2026 வரை கட்டுமான காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதற்கு நீதிபதிகள், அக்டோபர் 2026க்குள் பணிகள் முடியும் என எப்படி தெரிவிக்கிறீர்கள் என எழுப்பியுள்ள கேள்வி மிகச்சரியானது. ஏற்கனவே எய்ம்ஸ் வழக்கு கடந்தாண்டு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு தரப்பில் முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 17.8.2021ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடியும் நிலையில் உள்ளன. இந்த உத்தரவு கிடைத்த 36 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிவடையுமென எதிர்பார்ப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.உத்தரவு வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும், இன்னும் கிணற்றில் போட்ட கல்லாகவே எய்ம்ஸ் கட்டுமான பணி எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு பிரதமர் மோடி 2019, ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு எந்த முன்னேற்றமுமில்லை. அதே நேரம் 2017, அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய, இமாச்சல பிரதேசம், பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி முடிந்து 2022, அக். 5ம் தேதி அவராலேயே திறக்கப்பட்டும் விட்டது. இது ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுமானப்பணி நிறைவடைய 60 மாதங்கள் (5 ஆண்டு) ஆகி விட்டதாக கூறினாலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டி 45 மாதங்களை கடந்து விட்டன. தற்போதைய நிலவரப்படி சுமார் 70 – 75 சதவீத பணிகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.ஒரு எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான கால அளவு 36 மாதங்கள், 45 மாதங்கள் ஆகும். அதிகபட்சமாக 60 மாதங்கள். ஆனால், மதுரை தோப்பூரில் சுற்றுச்சுவர் பணிகளே முழுமையாக நிறைவடையாத அவல நிலைதான் காணப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவும் மதுரை எய்ம்ஸால் பலனடையும். கடந்த சில ஆண்டுகளாகவே, எய்ம்ஸ் கட்டுமானப்பணியை துவங்குவது தொடர்பாக, அடுத்தடுத்து நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே ஒன்றிய அரசு எய்ம்ஸ் தொடர்பான பணிகளில், சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள், தற்காலிகமாக ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. இங்கு படிப்ைப மாணவர்கள் முடிப்பதற்குள்ளாவது கட்டுமானப்பணிகள் துவங்கப்படுமா என்ற கேள்வி மக்களின் மனதில் எழுந்துள்ளது. ஏற்கனவே, கடந்த மாத இறுதியில் மதுரை தோப்பூரில் ஆய்வு செய்த குழுவினர், ஓராண்டிற்குள் கட்டுமானப்பணிகள் துவங்குமென தெரிவித்தனர்.இதன்படி பார்த்தால் கட்டுமானப்பணிகளை அடுத்த அக்டோபர் மாதத்திற்குள் துவக்க வேண்டும். ஐகோர்ட் கிளையில் தெரிவித்தபடி, 3 ஆண்டுக்குள் முடித்தால் 2026, அக்டோபர் மாதத்திற்குள் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். நீதிபதிகள் தெரிவித்துள்ளபடி, அதற்குள் கட்டுமானப்பணிகளை ஒன்றிய அரசு முடிக்குமா என்பதுதான் அனைவர் மனதிலும் எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி….

The post நிறைவேற்றுமா ஒன்றிய அரசு? appeared first on Dinakaran.

Tags : Madurai ,AIIMS ,Igord ,Government of the Union ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு அதிகரிப்பு!!