×

இந்தியாவில் முதல்முறையாக வேலூர் மாநகராட்சியில் அசத்தல்; குப்பைகளை 12 நாளில் உரமாக்கும் ஏ.கே.ஏ கருப்பு சிப்பாய் ஈக்கள்: பண்ணையில் வளர்க்கும் ஈக்களால் தினமும் 2 டன் குப்பைகள் அழிப்பு

வேலூர்: இந்தியாவில் முதல்முறையாக வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஈக்களை உற்பத்தி ெசய்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகளாகவும், மக்காத குப்பைகளாகவும் தரம் பிரித்து அதில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை சேகரித்து சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட மாற்று பயன்பாடுகளுக்கு அனுப்பவும் மாநகராட்சி முழுவதும் 43 இடங்களில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முன்மாதிரி திட்டமாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை பல்வேறு மாநில அதிகாரிகளும் ஆய்வு செய்து, அதை தங்கள் உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டது முதல் சாலையோரங்களில் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மூலமாக தினமும் வீடுகளுக்கு சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து, திடக்கழிவு மேலாண்மை கட்டிடத்தில் கட்டப்பட்டுள்ள, குப்பைகளை உரமாக மாற்றும் இடத்தில் குப்பைகளை கொட்டி வைக்கின்றனர். இதில் குப்பைகள் உரமாக மாற்ற, மாட்டு சாணம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இவை உரமாக மாற்றுவதற்கு 60 நாட்களுக்கு மேல் ஆனது. இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகளை உரமாக மாற்ற தாமதம் ஏற்பட்டது. இதனால் இக்கட்டிடங்களுக்கு அருகாமையில் குப்பைகளை கொட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, குப்பைகளை எளிதில் உரமாக மாற்ற கேரளாவில் பாக்டீரியா வாங்கப்பட்டது. பாக்டீரியா மூலம் குப்பை உரமாக மாற்ற 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை தேவைப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தண்ணீரில் கலந்து குப்பைகள் மீது தெளித்துவிட்டால், பாக்டீரியாக்களுக்கு உயிர் வந்துவிடும். பின்னர் 30 நாளில் குப்பைகள் உரமாக மாறிவிடும். பின்னர் இந்த உரம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை விரைந்து உரமாக மாற்றுவதற்காக புதிய தொழில்நுட்ப நடைமுறையை மாநகராட்சி நிர்வாகம் தற்போது கையாண்டு வருகிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் முதல்முறையாக வேலூர் மாநகராட்சியில் ஈக்களை கொண்டு குப்பைகளை உரமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதற்காக 1வது மண்டலத்திற்கு உட்பட்ட விருதம்பட்டு திடக்கழிவு மேலாண்மை மையத்தில் ஈக்களை கொண்டு உரமாக்கும் பணி கடந்த 2021ம் ஆண்டு சோதனை ஓட்டமாக தொடங்கப்பட்டது. தற்போது தினந்தோறும் 2 டன் குப்பைகளை உரமாக்கும் பணி நடந்து வருகிறது. இதன்மூலம் தினந்தோறும் 200 கிலோ உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சியால் குப்பைகள் விரைந்து உரமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த அனுப் கூறியதாவது: அமெரிக்கா, ஐரோப்பியா, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளில் ஏ.கே.ஏ கருப்பு சிப்பாய்கள் என்று அழைக்கக்கூடிய ஈக்கள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஈக்களை கொண்டு தமிழகத்திலும் உரம் தயாரிக்க முடியுமா? என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. பெங்களூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏ.கே.ஏ கருப்பு சிப்பாய் ஈக்கள் பெறப்பட்டது. அதைதொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் கீழ் இந்தியாவில் முதல்முறையாக பொது தனியார் கூட்டாண்மை மாதிரி திட்டத்தின் கீழ் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்க ஈக்களை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக என்செக்ட் பார்ம் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்தியாவில் முதன்முறையாக வேலூர் மாநகராட்சியில் இந்த ஏ.கே.ஏ கருப்பு சிப்பாய் ஈக்களை கொண்டு உரம் தயாரிக்க அனுமதி கோரப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு அனுமதி கிடைத்தது. விருதம்பட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கு பகுதியில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. தனியாக ஈக்களுக்கு என்று பண்ணை அமைக்கப்பட்டது.ஈக்கள் வைக்கும் முட்டைகள் மூலம் ஈக்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சேகரிக்கப்படும் முட்டைகளை ஒரு பெட்டியில் வைத்து லார்வா புழுக்கள் நிலையில் இருந்து உருவாக்கி அதை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 5 நாட்கள் வரை அதற்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. அதன்பிறகு புழுக்கள் போல தோற்றம் வந்த பிறகு திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளில் இந்த புழுக்கள் விடப்படுகிறது. ஒவ்வொரு தொட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு புழுக்கள் போடப்படுகிறது. அந்த புழுக்கள் 12 நாட்கள் வரை உணவுகளை தின்று குப்பைகளை உரமாக்கும் பணியில் ஈடுபடுகிறது. தற்போதைய அலகு திறன் ஒரு நாளைக்கு 2 டன் கழிவுகளில் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே அலகில் ஒரு நாளைக்கு 5 டன் வரை கழிவுகளை பயன்படுத்தலாம். கசிவு, மாசு இல்லை. குறைவான பசுமை வாயுக்கள் மற்றும் குறைவான கார்பன் தடம் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.  தற்போது சோதனை ஓட்டமாக ஒரு பகுதியில் மட்டும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் மாநகராட்சி முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை பார்த்துவிட்டு மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post இந்தியாவில் முதல்முறையாக வேலூர் மாநகராட்சியில் அசத்தல்; குப்பைகளை 12 நாளில் உரமாக்கும் ஏ.கே.ஏ கருப்பு சிப்பாய் ஈக்கள்: பண்ணையில் வளர்க்கும் ஈக்களால் தினமும் 2 டன் குப்பைகள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Asatal ,Vellore Corporation ,Vellore ,Dinakaran ,
× RELATED வழக்கம்போல் மாணவிகள் அசத்தல் பிளஸ்1...