×

500 பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட்டு இயற்கை விவசாயி சாதனை

காரைக்கால்: காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் 40 மாணவ, மாணவியர் ஊரக, விவசாய மற்றும் வேளாண் தொழில் பணி அனுபவ பயிற்சியின் ஒரு அங்கமாக நேற்று முன்தினம் அக்கல்லூரியின் இணை பேராசிரியர் ஆனந்த்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பராமரித்து பாதுகாத்து சாதனை செய்த வடக்கு வரிச்சிக்குடி கிராம இயற்கை விவசாயி பாஸ்கர் வயலுக்கு சென்று பயிற்சி பெற்றனர். வேளாண் பயிற்சியில் இயற்கை விவசாயி பாஸ்கரன் மாணவர்களிடையே பேசுகையில், மரபு ரகங்களின் பிரத்தியேக மாறுபட்ட பண்புகள், சிறப்பு அம்சங்கள், வேறுபாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கூறினார். உதாரணமாக கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், கருங்குறுவை, பால்குடை வாழை, ஒட்டடையான், காட்டுயானம் போன்றவற்றை விளக்கினார். மிகவும் அதிக மருத்துவ குணங்கள் கொண்டது கருப்புக்கவுனி. நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகும்.அதிக நார்ச்சத்து நிறைந்தது மற்றும் உடலில் நச்சுத்தன்மையை விலக்கி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி வயிற்றுப்புண், வாயு, தோல் நோய்க்கு நல்ல மருந்தாகும். இது போன்று ஒவ்வொரு பாரம்பரிய நெல் ரகங்களுக்கும் ஒவ்வொரு குணமுள்ளது. ஆகையால் பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிட வேண்டும், அதன் மூலம் “உணவே மருந்து மற்றும் மருந்தே உணவு” என்பது வாழ்வியலாக மாறும் என்றார். பாரம்பரிய நெல் ரகங்களின் ஒரு கிலோ விதைகளை சராசரியாக 60 ரூபாய்க்கு விற்பதாக கூறினார். கடந்த ஆண்டு கருப்புக்கவுனி ரகம் மிக பிரபலமாக பயிரிடப்பட்டது, இந்த ஆண்டு சீரக சம்பா மற்றும் தூயமல்லி பிரபலமாக பயிரிடப்பட்டன. பாரம்பரிய நெல் ரகங்களின் மகசூல் பற்றி அவர் குறிப்பிடும் போது ஒரு ஏக்கரிலிருந்து கேரளா சுந்தரி மற்றும் பாகுரூபி 6 டன்கள் வரை கொடுக்கும். கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா சுமார் 1.8 டன் கொடுக்கும். பச்சைபெருமாள், வாழைப்பூ சம்பா ஆகிய ரகங்கள் 2 ½ முதல் 3 டன்கள் வரை விளைச்சல் தரும் என்றார். நெல்லாக விற்பனை செய்வதை விட அரிசியாக மதிப்புக்கூடல் செய்து விற்றால் இரு மடங்கு லாபம் காணலாம். அரிசியின் மகத்துவத்திற்கு தகுந்தவாறு அவற்றின் விலை மாறுபடும் என்றார்.மேலும் இயற்கை விவசாயி பாஸ்கரன் 6 பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சில முக்கிய தானியங்களை பயன்படுத்தி மதிப்புக்கூடல் செய்து தயாரிக்கும் சத்துமாவின் மருத்துவ குணங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். காரைக்கால் மாவட்டம் மட்டுமல்ல புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த பாஸ்கர் பண்ணை ஒரு பல்லுயிர் பாதுகாப்பு மரபணு வங்கி ‘ என்றும் உணவு, நுண்ணூட்டம், மற்றம் விதை பாதுகாப்பை உறுதி செய்து நாடு தன்னிறைவு பெற ஏதுவாக வளர்ச்சியில் தனது பங்களிப்பை நிலைநாட்டி உள்ளார் பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post 500 பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட்டு இயற்கை விவசாயி சாதனை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Pandit Javaharlal Nehru Agricultural College and ,Research Station ,
× RELATED காரைக்கால் அம்மையார்-பரமதத்தர்...