×

தேவை திராவிட மாடல்

டெல்லியில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண் ஷ்ரத்தாவை அவரது காதலன் அப்தாப் படுகொலை செய்துவிட்டார். அதே போல் உபியில் பெற்றோர் விருப்பத்தின் பேரில் வேறு ஒருவரை திருமணம் செய்த ஆராதனா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் 6 துண்டாக வெட்டி வீசிவிட்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த ஆயுஷி என்ற கல்லூாி மாணவியை டெல்லியில் வைத்து பெற்ற தாயும், தந்தையும் சுட்டுக்கொன்று ஆணவ படுகொலை செய்துவிட்டு சாலை ஓரத்தில் உடலை வீசிச்சென்று விட்டார்கள். இவை எல்லாம் அறிந்த செய்திகள். இன்னும் அறியாத, காரணம் தெரியாத பெண் சாவுகள் எத்தனையோ?.பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கொ ரோனா காலகட்டத்திற்கு பின் அதிகரித்த வண்ணம் உள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளன. ஒவ்வொரு 11 நிமிடத்திலும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது காதலன் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுவது தெரியவந்துள்ளது. மனித உரிமை தாக்குதலில் பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் தான் இன்று அதிகரித்து உள்ளது என்று கவலை தெரிவித்து இருக்கிறார் ஐநா பொதுச்செயலாளர் அன்டனியோ கட்ரெஸ். நவம்பர் 25ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையை முற்றிலும் அகற்ற சபதம் எடுக்கும் நாள். ஆனால் நேரடியாக மட்டுமல்லாமல், டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்கள் மூலம் தற்போது தினம் தினம் வக்கிர தாக்குதல்கள். கொரோனாவுக்கு பின் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களுக்கு பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை எப்படி பொறுப்பாக்க முடியும்?. பெண்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்தை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகள் கூட தற்போது உலகம் முழுவதும் தொடங்கியிருக்கிறது. இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அனைத்து நாடுகளும் தேசிய அளவில் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கட்ரெஸ் அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார். பெண்கள் மீதான மதிப்பை மீண்டும் உயர்த்த அவர் 2026ம் ஆண்டிற்குள் பெண்  உரிமை அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கு வழங்கும் நிதியை 50 சதவீதம் உயர்த்த அவர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பெண்கள் மீதான தாக்குதலை எந்தவிதத்திலும் சகித்துக்கொள்ள முடியாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அதோடு மகளிர் முன்னேற்றம் தான் சமூகத்தின் வெற்றி என்ற திராவிட மாடல் கொள்கை உடையவர். அதிலும் குறிப்பாக பெண்கள் படித்தால் தான், பணிக்கு சென்றால் தான் இந்த சமூகம் முழுமையாக மாறும் என்பதில் உறுதி கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் அரசு பஸ்களில் இலவசம், உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத இடம், அரசு பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.1000 உள்பட பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கை இன்று உலகம் முழுவதும் தேவை….

The post தேவை திராவிட மாடல் appeared first on Dinakaran.

Tags : Need Dravidian ,Shraddha ,Delhi ,Abtab ,UP ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...