×

திருப்பூர் பெண்களின் வாழ்க்கை!

சின்னத்திரை பிரபலம் வினிதா நாயகியாக நடிக்கும் படம் ‘முள்ளில் பனித்துளி’. இந்தப் படத்தை டிரெண்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கிறது. நாயகனாக புதுமுகம் நிஷாந்த் நடிக்கிறார். இசை அமைப்பாளராக பென்னி பிரதீப் அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ந.ம.ஜெகன். படத்தைப் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெகன் பேசுகையில், “திருப்பூர் பின்னணியில் பெண்கள் படும் துயரங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல்களையும் பற்றிய உணர்வுபூர்வமான படைப்பு இது.  

நடுத்தரக் குடும்பங்களில் யதார்த்தமான வாழ்வியலை வணிக சினிமா வரையறைக்கு உட்படாமல் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறேன். தற்கொலை குறித்து சமூகம் கொடுக்கும் அழுத்தங்களை உளவியல் ரீதியாகவும், பாலியல் சுரண்டல் நடைபெறும்போது அதனை எதிர்கொள்வது குறித்த  விஷயங்களும் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கிறது. இதன் கதையை ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்தே மெய் என்பதே.

எனக்கு ஏற்றுமதி தொழிலைத் தவிர திரைப்படங்களை இயக்குவதில் விருப்பம் இருந்தது. அத்துடன் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை சினிமா போன்ற வலிமையான ஊடகத்தின் மூலம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இந்தப் படத்தைத் தயாரித்து இயக்க முன் வந்தேன். சினிமாவை யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. இணையதளங்களில் ஃபிலிம்  மேக்கிங் பற்றிய விவரங்கள் குவிந்துள்ளது. தன்னம்பிக்கை இருந்தால் சினிமா எடுத்துவிடலாம்.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடிக்க காரணம் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறு காரணமில்லை. கதையின் நாயகி வினிதாவைத் தவிர படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலானவர்கள் புதுமுகங்களே. அவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்த பிறகே படப்பிடிப்பைத் தொடங்கினோம். ஆனாலும் புதுமுகங்களை வைத்து படம் எடுப்பது என்பது கொஞ்சம் டஃப்பான காரியம்.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிறது.

பாடலை எழுதியவர்களும், பின்னணி பாடியவர்களும், இசையமைத்தவரும் புதுமுகங்கள்தான். திருப்பூர், பொங்கலூர், சென்னை என பல இடங்களில் ஒரு மாதத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்துக்கும் இதே வரவேற்பு கிடைக்கும்’’ என்றார்.

Tags : women ,Tiruppur ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...