×

பாகுபலியை விட பெரிய சவாலை எதிர்கொண்டேன்! சொல்கிறார் ராணா

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி நாயகனாக நடிக்கும் படம் ‘காடன்’.  இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளில் உருவாகியுள்ளது. முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். நாயகிகளாக ஸ்ரியா பில்கோங்கர், சோயா உசேன் நடித்துள்ளார்கள். ஷாந்தனு மோய்த்ரா இசையமைத்திருக்கிறார். படத்தைப் பற்றி ராணா டகுபதியிடம் கேட்டோம்.

‘‘நானும் சரி, என் குடும்ப உறுப்பினர்களும் சரி யானை சம்பந்தப்பட்ட படங்களில் நடித்ததில்லை. இந்தப் படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்தது கதை. என் கேரியருக்கு இந்தப் படம் எப்படி முக்கியமான படமோ அதுமாதிரி சமூகத்துக்கும் அவசியமான படமாக இருக்கும். ஒரு மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுபூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் சொல்லும் படம்தான் ‘காடன்’.

அசாமின் காசிரங்காவில் யானைகளின்  வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்த துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை இது.  இந்தப் படம் ஒரு மனிதனின் விவரிப்பாக, காட்டையும் அதன் விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு, தான் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்வின் அடித்தளத்தை, ஆக்கிரமிப்பு குணங்கொண்ட மனிதர்களின் முயற்சிகள் சீர்குலைக்க முற்படுகையில், காட்டையும், விலங்குகளையும் மீட்டெடுக்க முற்படும் போராட்டத்தின் மையப்புள்ளியாக அவன் எப்படி மாறுகிறான் என்பதே இதன் கதைக்களம்.

இந்தப் படம் இன்றளவும் நடக்கும் பிரச்சனைகளைப் பேசுவதால் பெரியளவில் வரவேற்பு பெறும். முதல் கட்டம் முடிந்தபிறகுதான் இந்தப் படத்தின் முக்கியத்துவம் எனக்குத் தெரிந்தது. காடுகள் பற்றிய பட வரிசையில் இதற்குமுன்பு இந்தமாதிரி வந்ததும் இல்லை; இனியும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லுமளவுக்கு இந்தப் படம் வந்துள்ளது. மொத்த டீமும் இரண்டரை வருடம் உழைத்திருக்கிறோம். உடலை வருத்தி இந்தப் படத்தைப் பண்ணியிருக்கிறேன். அந்தளவுக்கு என்னுடைய சரீரத்தில் பல மாற்றங்களைப் பார்க்கலாம். படம் பார்க்கும்போது, காட்டில் பிறந்து காட்டில் வாழ்ந்த ஒருவர் என்று சொல்லுமளவுக்கு என்னுடைய கேரக்டர் உண்மைக்கு மிக அருகில் இருக்கும்.

இயக்குநர் பிரபு சாலமன் சார் இந்தப் படத்தை கமர்ஷியல் ஜானர்ல பண்ணியிருக்கிறார். சார் முதன்முறை கதை சொன்ன போது யானைகளை கிராஃபிக்ஸ் பண்ணப்போகிறீர்களா என்று கேட்டேன். ஆனால் அவர் தாய்லாந்தில் நிஜ யானைகளுக்கு மத்தியில் என்னை நிற்கவைத்துவிட்டார். படத்தில் ஏராளமான யானைகள் இடம்பெற்றாலும் ‘தமிழ்’ என்ற யானை என்னோடு ஜெல்லாகிவிட்டது.

ஒரு காட்சியில் யானை என் தோள்பட்டை மீது தும்பிக்கை வைக்க வேண்டும். யானையின் தும்பிக்கை சுமார் 200 கிலோ எடை. டைமிங் கரெக்ட்டாக இருந்தால் மட்டுமே அந்த ஷாட் எடுக்க முடியும். சில சமயம் ஷாட் எடுக்க லேட்டாகும். ஒரு பக்கம் யானையின் அழுத்தம் பெரிய வலியைக் கொடுக்கும். இன்னொரு பக்கம் நம்மை அறியாமல் பயமும் வரும். அந்த மாதிரி சமயத்தில் மிரட்சியை அடக்கி எக்ஸ்பிரஷன் கொடுக்கணும். அதுபோன்ற காட்சிகள் படத்தில் ஏராளமாக உண்டு.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகும் படம் என்பதால்  மொழிக்கு ஒரு முறை என்று மூன்று முறை முப்பது யானைகளுடன் பேசிக்கொண்டே நடந்து வரவேண்டும். தெலுங்கு எனக்கு தாய்மொழி என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் தமிழ், இந்தியில் நடிக்கும்போது கவனமாக டயலாக் பேசவேண்டும். டயலாக் கொஞ்சம் சொதப்பினாலும் மறுபடியும் முப்பது யானைகளை பின்னோக்கி நகர்த்தி படமாக்க வேண்டும். இந்தப் படம் எனக்கு பத்து படத்தில் நடித்த அனுபவத்தைக் கொடுத்தது.

இந்தப் படத்தின் மூலம் என்னுடைய கேரியர் அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று நினைக்கிறேன். படத்தில் லட்சம் மரங்கள் இருக்கின்றன. அதில்  ஒரு மரமாக என்னுடைய கேரக்டர் இருக்கும். படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் வீரபாரதி. ஊர் மக்கள் காடன் என்று கூப்பிடுவார்கள்.
இந்தப் படத்துக்குப் பிறகு யானையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும்.

சில வருடங்களுக்கு முன்பு ‘சேவ் டைகர்’ என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு புலிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியபோது புலிகள் சரணாலயத்துக்கு நிதி கிடைத்ததோடு அதன் பாதுகாப்புக்கு உறுதி கொடுக்க முடிந்தது. அதுபோல் இதில் யானை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு என்பது வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. புலிகளுக்கு கிடைத்த பாதுகாப்பும் அரவணைப்பும் போல் இந்தப் படம் யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தற்போது விலங்கினங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளது. சில சமயம் உணவே விஷமாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. இதை நாங்கள் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் அறிந்துகொள்ள முடிந்தது. யானைகளுக்கு ஆப்பிள் பிடிக்கும். படப்பிடிப்பில் ஒருவர் யானைக்கு ஆப்பிள் கொடுக்க முயற்சி செய்தபோது யானை நொடிப்பொழுதில் அந்த ஆப்பிளைத் தூக்கி வீசியது. உடனே இயக்குநர் ஆப்பிளை வாங்கிப் பார்த்தபோது அதில் மெழுகு இருந்தது. கத்தி எடுத்து மெழுகை வழித்தெடுத்த பிறகுதான் யானை ஆப்பிளைச் சாப்பிட்டது.

என்னுடைய திரைப்பயணத்தில் ‘பாகுபலி’ திரைப்படம் எனக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக அமைந்திருந்தது என நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், இந்தப் படத்திற்காக  அடர்ந்த காடு, அதன் பிரம்மாண்டம், விலங்கினங்கள், பறவையினங்கள் என வித்தியாசமான, முற்றிலும் எதிர்பாராத சூழலில்  நடித்தது, அதைவிட மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதிலும் குறிப்பாக யானைகள் மிகவும் பிரமிப்பானவை. இந்த அனுபவம் எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தையே உருவாக்கியது, என்னையும் மாற்றியது என்றால் அது மிகையில்லை. இந்தப் படத்தில் நடித்ததை பெருமையாகப் பார்க்கிறேன். ஏனெனில், இது எல்லோருக்கும் கிடைக்கும் படம் அல்ல’’ என்றார் ராணா.

Tags : Rana ,
× RELATED அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை...