×

அஜித்தையே உருகவைத்த மானு!

அழகான பெண்களைப் படைத்த பிரம்மன். அழகிலும் அழகான ஒரு பெண்ணைப் படைத்து, இனி அவளை விட அழகியை படைக்க முடியாது என்று கருதி, அந்த பெண்ணுக்கு அவன் வைத்த பெயர்தான் திலோத்தமை. இது புராணக் கதை. இயக்குனர் சரண் தன் முதல் படமான காதல் மன்னன் படத்தின் ஹீரோயினுக்கு வைத்த பெயர் திலோத்தமை. எனவே பெயருக்கு ஏற்ற மாதிரி அழகான பெண்ணைத் தேடி அலைந்தபோது கிடைத்தவர்தான் மானு. அஸ்ஸாம் தேசத்து அழகி.

பத்து படங்களுக்கு மேல் நடித்துவிட்ட அஜீத்துக்கு ஆக்‌ஷன் ஹீரோ என்கிற அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த காதல் மன்னன் படத்தில் அஜீத்தின் ஜோடி மானு. “உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே…” என்று அஜீத் உருகி உருகி பாடும்போது ரசிகனும் உருகினான். மானு அத்தனை அழகு. கண்களைச் சிமிட்டி தலையைச் சாய்த்து புன்னகைத்து மேனரிசம் காட்டும் மானுவின் முகத்தை 22 வருடங்களுக்குப் பிறகும் மறக்க முடியவில்லை.

கதைப்படி மானுவின் தந்தை கிரீஷ் கர்நாட். ஒரு மிகவும் கண்டிப்பான மாஜி ராணுவ அதிகாரி. அதுவும் அவருக்கு காதல் என்றால் பிடிக்கவே பிடிக்காது. காதல் என்ற வார்த்தையை உச்சரித்தாலே சவுக்கடிதான். இந்த கெடுபிடிகளாலேயே காதல் ஏற்பட்டு, காதலனுடன் ஓடிப்போகிறார் மூத்த மகள். அந்த கோபத்தையும் சேர்த்து சந்திக்க ேவண்டிய நிலை மானுவுக்கு. அப்பாவின் கருத்தோடு ஒத்துப்போயிருந்தார் மானு. மெக்கானிக் அஜீத்தை சந்திக்கிற வரை. இருவருக்குள்ளும் காதல் தீ பற்றி எரியும், கிரீஷ் கர்நாட்டுக்கு கோபத்தீ பற்றி எரியும். இறுதியில் காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

அஜீத்துடன் காதலில் உருகுவது, அப்பாவின் சித்ரவதைகளை அனுபவிப்பது, சகோதரியின் நிலை கண்டு வருந்துவது, கடைசியில் காதல்தான் பெரிதென்று அதிரடி முடிவெடுப்பது என காதல் மன்னனின் காதல் ராணியாகவே வாழ்ந்தார் மானு. அழகிற்கும், நடிப்புக்கும் பஞ்சமே இல்லாத மானு ஏன் ஒரே படத்தோடு சினிமாவை விட்டு விலகிப்போனார் என்பது இப்போது வரை விடை தெரியாத மில்லியன் டாலர் கேள்வி.

ரசிகர்களும், சினிமாவும் மானுவை மறந்து விட்ட நிலையில் மீண்டும்  2011ல் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார் மானு. இப்போது நடிகையாக அல்ல, சூப்பர் ஸ்டாரின் செவிலித் தாயாக. ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அருகில் இருந்து கவனித்துக் கொண்டவர் மானு. அதன்பிறகுதான் மானு சிங்கப்பூரில் செட்டிலாகி நல்ல வசதியுடன் வாழ்ந்து வந்தது உலகுக்குத் தெரிய வந்தது. எல்லோரும் மானுவை பாராட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவரை சினிமா மீண்டும் அழைத்தது. குரு.ரமேஷ் என்ற இயக்குனர் மானுவை சிங்கப்பூரில் சந்தித்து ஒரு கதை சொன்னார்.

அது ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படம். மிருகக்காட்சிச் சாலைக்குள் சிக்கிக் கொண்ட ஒரு 7வயது சிறுமியின் தாய் கேரக்டர். பாசம், பதட்டம், பரிதவிப்பு என நடிப்பின் பல்வேறு பரிமாணம் காட்டும் கேரக்டர். கதையைக் கேட்டாலும் நடிக்க விருப்பமில்லை என்று மறுத்து விட்டார் மானு. இதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் நீ மீண்டும் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அந்தப் படத்தில் நடிக்க வைத்தார்.

22 வருடங்களுக்கு முன்பு காதல் ராணியாக வாழ்ந்து காட்டியவர் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தில் ஒரு தாயாக வாழ்ந்து காட்டினார். ரீஎன்ட்ரியில் ஒரு தாயாக, சகோதரியாக, அண்ணியாக வலம் வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த ஒரு படத்தோடு தனது ரீஎன்ட்ரியை ஏன் முடித்துக் கொண்டார் மானு என்பது அடுத்த மில்லியன் டாலர் கேள்வி.

Tags : Manu ,Ajith ,
× RELATED காங்கிரஸ் போட்டி வேட்பாளர் மனு டிஸ்மிஸ்