×

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது கிரஷ் இருக்கிறது! ரித்திகா சிங் கன்னம் சிவக்கிறது!!

‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் ரித்திகா சிங். தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’ என்று அடுத்தடுத்த சுற்றுகள் மூலம் முன்னணி நடிகைக்கான ரேஸில் முந்தும் ரித்திகாவின் சமீபத்திய படமான ‘ஓ மை கடவுளே’ ரிலீஸான நிலையில் ரித்திகா சிங்கை சந்தித்தோம்.

கிக் பாக்ஸிங் டூ சினிமா?

எல்லா பிள்ளைகளுக்கும் அவர்கள் அப்பாதான் ஹீரோ. அந்த மாதிரி என் வாழ்க்கையில் பாக்ஸிங் இடம்பிடிக்க காரணம் அப்பா. அவர்தான் எனக்கு பாக்ஸிங் சொல்லிக் கொடுத்தார். என் தம்பிக்கும் பாக்ஸிங் தெரியும். அந்த வகையில் பாக்ஸிங் என் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம் என்று சொல்லலாம். வீட்டில் இருப்பவர்களுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிமானம் இருந்ததால் பெரிதாக எதிர்க்கவில்லை. அதுவும் மாதவன் படம் என்றதும் டபுள் ஓக்கே சொல்லிவிட்டார்கள்.

இப்போ நடிச்ச ‘ஓ மை கடவுளே’ பட அனுபவம் எப்படிஇருந்தது?

இந்த காதலர் தினம் எனக்கு மறக்க முடியாதது. ஒரு பிப்ரவரி 14ம் தேதி தேசிய போட்டியில் பங்கேற்று கோப்பை வென்றேன். இந்த பிப்ரவரி ‘ஓ மை கடவுளே‘ வெளியாகியுள்ளது. அது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.ஏனெனில், என்னுடைய முதல் படத்துக்குப் பிறகு முழுமையான ரொமான்ஸ் படம் பண்ணவேண்டும் என்று நினைத்தேன். திடீர்னு ஒரு நாள் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கதை சொல்ல வேண்டும் என்றார். என்னுடைய வீடு மும்பை புறநகரான கல்யாண் பகுதியில் இருக்கிறது. சாலை வழியாக வருவதாக இருந்தால் நேரம் அதிகம் பிடிக்கும். பொதுவாக நான் மும்பை செல்வதாக இருந்தால் ரயில் மார்க்கமாக செல்வேன்.

என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்ட இயக்குநர் கல்யாணில் இருக்கும் எங்கள் வீட்டுக்கே வந்து கதை சொன்னார். இரண்டரை மணி நேரம் கதை கேட்டேன். கதை சொல்லி முடிக்கும்போது ‘படத்தில் உங்களுக்கு கிறிஸ்தவ பெண்ணின் திருமண ஆடை காஸ்டியூம் இருக்கிறது’ என்றார். அப்போது நான் பரவசமாகி ‘நீங்கள் இதை முதலிலேயே சொல்லியிருந்தால் உடனே ஓ.கே. பண்ணியிருப்பேன். ஏனெனில், கிறிஸ்தவ மணப்பெண் அலங்காரத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்றேன். மொத்த டீமுடன் பழகியது நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். அனு கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அசோக் செல்வன் எப்படி?

ஃப்ரெண்ட்லியாக பழகுபவர். எங்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட்டானதால் காதல் காட்சிகளில் இயல்பாக நடிக்க முடிந்தது. பழக்கமில்லாதவருடன் நடிக்கிறோமே என்ற எண்ணம் எந்த இடத்திலும் எழுந்ததில்லை. படப்பிடிப்புத் தளத்தில் சகஜமாகப் பேசிப் பழக முடிந்தது. அசோக் நடிப்பு பற்றி சொல்வதாக இருந்தால் நேச்சுரல் ஆக்டர்.

பெரிய கேரக்டரில் நடித்தாலும் கேரக்டருக்கான பந்தா இருக்காது. ஒவ்வொரு டேக்கும் புதுசாக  இருக்கும். வாணி போஜன் சிறந்த நடிகை. நடிகைகள் மத்தியில் பொறாமை, போட்டி இருக்கும் என்ற பேச்சு பொதுவாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கமாட்டார்கள் என்று சொல்வார்கள். எங்கள் விஷயத்தில் அப்படியில்லை. வாணிதான் எனக்கு மேக்கப், உடைகள் உட்பட பல விஷயங்களில் உதவியாக இருந்தார்.

அடுத்து யாருடன் நடிக்க விருப்பம்?

மாதவன், விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, சூர்யா, தனுஷ் என்று என்னுடைய விருப்பப் பட்டியல் பெரியது. இந்தப் பட்டியலில் இப்போது அசோக் செல்வன், ஜெயம் ரவி இணைந்துள்ளார்கள்.

ஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ணுவது ஈஸியா அல்லது டான்ஸ் பண்ணுவது ஈஸியா?

ஹீரோவுக்கும் எனக்குமான வேவ்லெங்க் கரெக்டாக இருந்தால் ரொமான்ஸ் பண்ணுவதாகட்டும், வேறு எந்தக் காட்சியில் நடிப்பதாக இருக்கட்டும், எல்லாமே ஈஸியாக இருக்கும். ஹீரோ பற்றிய அறிமுகம் இல்லாதபோது கொஞ்சம் தயக்கம் இருக்கும். அதுவும் சில நாட்களில் மறைந்துவிடும். மற்றபடி நடிப்பு என்று வந்துவிட்டால் என்னுடைய தி பெஸ்ட் கொடுக்க தயங்கமாட்டேன்.

கிசுகிசுவை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?


விளையாட்டுத் துறையிலும் சினிமாவிலும் கிசுகிசுவுக்கு பஞ்சமிருக்காது. விளையாட்டில் பிஸியாக இருக்கும்போது சொந்தமாக நடமாடும் ஜிம் வைத்திருப்பதாகச் சொன்னார்கள். சொந்தமாக வைத்துக்கொள்ளுமளவுக்கு என்னிடம் ஏது பணம்? சினிமாவில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என்று சொல்வார்கள். நானும் இப்போது நடிகையாகிவிட்டேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை.

உங்களுக்கு ‘பப்பி’ லவ் அனுபவம் இருக்கிறதா?

பதின் பருவத்தில் இருப்பவர்களுக்கு யார் மீதாவது க்ரஷ் வரத்தான் செய்யும். அப்போது கிரிக்கெட் வீரர் பிரெட்லி மீது எனக்கு க்ரஷ் இருந்தது. அதுக்காகவே அவர் ஆடும் ஆஸ்திரேலியா மேட்ச்சை ஒண்ணு விடாமல் பார்ப்பேன்.

சினிமாவில் பாலியல் தொந்தரவு இருப்பதாகச் சொல்கிறார்களே?

பாலியல் சார்ந்த தொந்தரவு எல்லா துறையிலும்தான் இருக்கு. நமக்கு வீட்டில் கிடைக்கும் ஆதரவைப் பொறுத்தே நாம் முன்னேற  முடியும்.
சுதா கொங்கரா?என் வாழ்க்கையை முழுமையாக மாற்றியவர் அவர். நான் இப்படி உங்கள் முன் பேட்டியெல்லாம் கொடுப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. அதுதான் வாழ்க்கை.

மாதவன் சாரிடம் தொடர்பில் இருக்கிறீர்களா?

நிச்சயமா. ‘ஓ மை கடவுளே’ டிரைலர் வெளியானதும் போன் பண்ணி நல்லா இருந்தது என்று வாழ்த்தினார். மாதவன் சார் மிகவும் வெளிப்படையானவர். மற்றவர்களிடம் இருக்கும் திறமைக்கு மரியாதை கொடுக்கக்கூடியவர். அப்படித்தான் ‘இறுதிச்சுற்று’ படத்தின்போது உன்னால் முடியும் என்று என்கரேஜ் பண்ணி நடிக்க வைத்தார்.

குறைவான படங்களில் நடிப்பது பற்றி?

எண்ணிக்கையைவிட நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். தயாரிப்பு நிறுவனம், நடிகர், இயக்குநர், கதை, என்னுடைய கேரக்டர் என்று அனைத்திலும் கவனம் செலுத்துவதால் கடந்த நான்கு வருடத்தில் நான்கு படங்கள் மட்டுமே பண்ணியிருக்கிறேன்.

சினிமா, விளையாட்டு - எதற்கு முன்னுரிமை?

சினிமாவும் விளையாட்டும் எனக்கு இரு கண்கள் மாதிரி. இரண்டிலும் பெயர் எடுக்கவே விரும்புகிறேன். சினிமாவில் லீவு கிடைக்கும்போது என்னுடைய நேரத்தை விளையாட்டுக்குத்தான் ஒதுக்குவேன். எப்போதுமே என்னால் ஒரு இடத்தில் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது. தினம் தினம் புதுமையான விஷயங்களைச் செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்படித்தான் பாக்ஸிங், நடிப்பு எல்லாவற்றையும் பார்க்கிறேன். அதனால் எதையும் மிஸ் பண்ணமாட்டேன்.

ஸ்போர்ட்ஸ் படங்களில் மீண்டும் நடிப்பீர்களா?

நடிக்கலாமே. ‘இறுதிச்சுற்று’ படம் வெளியான சமயத்தில் பாக்ஸிங் கதைகள் வந்தது. சிறிது காலம் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். பிற விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைகள் வந்தால் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு ஆக்‌ஷன் வேடங்களில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அப்படி வந்தால் ஓடோடி வந்து நடிப்பேன்.

நிஜத்தில் நீங்கள் எப்படி?

பொதுவாக விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் எல்லா விஷயத்தையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொள்வார்கள். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என்னுடைய தோழிகளுடன் சேர்ந்தால் செம ரகளையாக இருக்கும். இந்த ரகளை சிலசமயம் படப்பிடிப்புத் தளங்களிலும் தொடரும். இயக்குநர் மூட் பொறுத்து சேட்டை இருக்கும். ஒரு சமயம் ஒரு படப்பிடிப்பில் இயக்குநரின் மைக்கைப் பிடுங்கி பேக்கப் சொல்லிய சம்பவமும் நடந்துள்ளது. இயக்குநர் இறுகிய முகத்துடன் இருந்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவேன்.

உங்களுக்கு தமிழ் நன்றாக வருகிறதே?

தமிழ்ப் படங்கள் வழியாக தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கிறது. தமிழகத்தில் குறைவான நாட்கள்தான்  இருந்திருக்கிறேன். ஆனால், தமிழில் பேசுவதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு பிக்கப் பண்ணிவிட்டேன். அடுத்து பேசவேண்டும். அதற்கும் நான் நடிக்கும் தமிழ்ப் படங்கள் உதவியாக இருக்கின்றன. தமிழ் மொழி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

பெண்களுக்கு நீங்கள் சொல்லும் தற்காப்பு ஆலோசனை என்ன?

பாக்ஸிங் விளையாடும்போது மட்டுமே ‘ரிங்’ உள்ளே இருந்து எதிர்க்கிறேன். மற்றபடி பெண்களுக்கான அச்சுறுத்தல் உலகமெங்கும் இருக்கிறது. என்னிடம் வம்பு இழுத்தால் நான் சும்மா இருக்கமாட்டேன். அதுக்காக என்னை சண்டைக்காரியாகப் பார்க்க வேண்டாம். அடிக்கிற கைதான் அணைக்கும் என்கிற மாதிரி அன்புக்கும் நான் அடிமை. அந்த வகையில் கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படவும் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதியாகவும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் வருங்காலக் கணவருக்கு என்ன மாதிரி தகுதி இருக்கவேண்டும்?

நேர்மை மிக முக்கியம். மற்றபடி காதல், அரேஞ்டு பற்றி கவலையில்லை. எதுவாக இருந்தாலும் எனக்கு அவரைப் பிடிக்கணும். அவருக்கு என்னைப் பிடிக்கணும். திருமண விஷயத்தில் ஆண், பெண் இருவரின் சம்மதம் முக்கியம்.

ஃபிட்னஸ் டிப்ஸ்?


காலையில் எழுந்ததும் உடலுக்கு வேலை கொடுங்கள். அது நடையாக இருக்கலாம் அல்லது நடனமாகவும் இருக்கலாம். சிறியளவிலாவது உடலை இடது, வலது என்று அசையுங்கள். அந்தப் பயிற்சி உடலுக்கும் உள்ளத்துக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுக்கும்.

Tags : Crush ,Australian ,Ritika Singh ,
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...