×

2 லட்சம் மரக்கன்றுகள், 45 ஆயிரம் விதைப் பந்துகள் ரெடி

திருச்சி எம்.ஆர். பாளைய வனவிரிவாக்க மையம்டெல்டா மாவட்டங்களுக்கு மரபியல் தரம் வாய்ந்த உயர்தர மர விதைகள் வழங்குவதற்காக நவீன விதை சேகரிப்பு மையம் திருச்சி எம்.ஆர்.பாளையம் பகுதியில் 1 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. அலுவலகம், ஆய்வுக்கூடம், சேமிப்பு மற்றும் வளர்ப்புக் கூடம், விதை உலர்த்தும் கலன், விதை சேமிப்புக் கிடங்கு என மொத்தம் ரூ.56 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. விதை தரம் பிரிக்கும் சாதனம், விதை பரிசோதனை சாதனம், விதை சேகரிப்பு உள்ளிட்டவைகள் 49.16 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டது. இந்த மையத்தில் விதைகளை சேகரித்தல், விதைகள் ஆய்வு, தரப்படுத்துதல், குளிர்ந்த அறைகளில் சேமித்தல் மற்றும் வழங்குதலுக்கான நவீன தொழில் வசதிகளை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மையம் துவங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை 8 டன் விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளில் இருந்து நாற்றங்கால் ஏற்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. தனியார் நர்சரிகளுக்கும் இந்த விதைகளை விநியோகித்து நாற்றங்கால் உருவாக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் மற்றும் தனியார் நர்சரிகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் என பலருக்கும் தேவை அதிகமாக இருப்பதால் இந்த மையத்தில் தேக்கு, ஈட்டி, சந்தனம், செம்மரம், வேங்கை, மகாகனி, நெல்லி, மூங்கில், பூவரசு, புங்கன், வேம்பு, நாவல் மற்றும் குமிழ்தேக்கு உள்ளிட்ட மரங்களின் விதைகள் சேகரிக்கப்பட்டு பலருக்கும் வழங்கப்பட்டுவருகிறது. இந்த விதை மையத்தினை நிர்வகிக்கும் வன அலுவலர் புவி அரசன் மற்றும் மையத்தில் பராமரிப்பாளராக பணியாற்றி வரும் ராம்சுந்தர் ஆகியோரிடம் பேசினோம். ‘‘ நல்ல தரமான விதைப் பந்துகளை உருவாக்கும் திட்டம் மற்றும் ஆராய்ச்சி 2019-20ம் வருடத்தில் துவங்கி இன்றுவரை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இந்த விதைப்பந்தில் அனைத்து விதமான உயிர் உரங்களும் சேர்க்கப்பட்டு, முளைப்புத்திறன் உள்ள விதைகள் இந்த விதைப்பந்துகளில் வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த விதைப் பந்துகள் எங்கு வீசப்பட்டாலும், அவை சென்று சேரும் இடத்தில் அந்த விதை முளைக்க தேவையான சூழ்நிலை இருந்தால் அவை நிச்சயம் முளைக்கும் அல்லது அது மண்ணிற்கு உரமாகும். விதை மையத்தின் மூலம் 50 வகையான நாட்டு மரங்களின் விதைகள் சேகரிக்கப்பட்டு அதை மக்களுக்கும், தனியார் நாற்றங்கால் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் துறைக்கும் மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல் வன பணியாளர்கள், ஊழியர்களால் சேகரிக்கப்படும் விதைகள் அனைத்தும், விதைகள் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு முளைப்புத்திறன் உள்ளதா என்பதை அறிந்த பின்னர் தான் பொதுமக்களுக்கு வழங்கப்படும். கடந்த 4 வருடத்தில் 6 டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த விதை மையத்தில் இருந்து நாட்டு மரங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு வறட்சியிலும் செழிப்பாக வளரும் மரங்கள் என மொத்தம் 75 வகையான மரவிதைகள் இந்த மையத்தில் தயார் நிலையில் உள்ளது. வனத்துறையின் விதைப்பண்ணையை விவசாயிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளிட்டவர்கள் இந்த நவீன விதை பண்ணையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொடுப்பதற்காக 2 லட்சம் மரக்கன்றுகள் தயாராக உள்ளது. விவசாயிகளுக்கு மரக்கன்று இலவசமாக கொடுத்து வருகின்றோம். இதைப்போல், 45 ஆயிரம் விதை பந்துகளும் தயார் நிலையில் உள்ளது என்கிறார் வன அலுவலர் புவி அரசன்.கருங்காலி (1 கிலோ ரூ.341), பரம்பை-ரூ.599), மெல்லிஜரா-ரூ.611, மஞ்சகடம்பு-ரூ.900, துரிஞ்சி -ரூ.599, வெண்கடம்பு -ரூ.3230, அழகு கொன்றை – ரூ.599, சவுக்கு -ரூ.1102, பொரசு – ரூ.599, பூமருது -ரூ.566,செண்பகம் -ரூ.1194, மகிழம் -ரூ.579, பெருதுகொன்றை -ரூ.620, வன்னி -ரூ.599, தைலமரம் -ரூ.566, நெல்லி – ரூ.5312, கல்யாணி முருங்கை – ரூ.1194, சில்வர் ஓக் -ரூ.6576, ஜகரண்டா -ரூ.1507, மஞ்சணமருது – ரூ.723, அகத்தி -ரூ.746, பட்டாடி -ரூ.1057, பூவரசு -ரூ.692, வெப்பாலை- ரூ.744 என விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தொடர்புக்கு: வனஅலுவலர் புவி அரசன் 94894 46800, பராமரிப்பாளர் ராம்சுந்தர் 96554 46994.தொகுப்பு: எஸ்.அலெக்ஸ்  படங்கள்: ஜெ.வி.அகஸ்டின் நிக்கோலஸ்

The post 2 லட்சம் மரக்கன்றுகள், 45 ஆயிரம் விதைப் பந்துகள் ரெடி appeared first on Dinakaran.

Tags : Trichy M. R.R. Wild Expansion Center ,Delta ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை