×

புத்தன்தருவையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்புசாத்தான்குளம் : புத்தன்தருவையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். சாத்தான்குளம்  ஒன்றியம் முதலூர், படுக்கப்பத்து ஆனந்தபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்   செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் துணை சுகாதார நிலையங்கள்  பல  கிராமங்களில்  செயல்படுகின்றன. சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள 24  ஊராட்சி எல்லைகள், இந்த 3  ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரித்து  கொடுக்கப்பட்டுள்ளன. அதில் சாத்தான்குளம் பேரூராட்சி, முதலூர்,  பொத்தகாலன்விளை உள்ளிட்ட பல பகுதிகள் முதலூர் ஆரம்ப சுகாதார  நிலையத்துக்கும், படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி, பெரியதாழை, அழகப்பபுரம்,  கொம்மடிக்கோட்டை, தட்டார்மடம் உள்ளிட்ட பல பகுதிகள் படுக்கப்பத்து சுகாதார நிலையத்துக்கும், ஆனந்தபுரம், பழங்குளம், செட்டிக்குளம்,  அமுதுண்ணாக்குடி, கொம்பன்குளம், அரசூர், புத்தன்தருவை உள்ளிட்ட பல  பகுதிகள் ஆனந்தபுரம் சுகாதார நிலையத்துக்கும் எல்லைகளாக உள்ளன. இந்த  பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள்  அந்தந்த சுகாதார  நிலையத்தில்  சிகிச்சை பெற்று அரசு உதவிகள் பெறும் நிலை உள்ளது. இதில் ஆனந்தபுரம் சுகாதார நிலையம் நாசரேத் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.ஆனால் இதன் சிகிச்சை பெறும் பகுதி தென்பகுதியில் உள்ள அரசூர், அதிசயபுரம்,புத்தன்தருவை, பனைவிளை, தச்சன்விளை பகுதி வரை உள்ளது. இதனால்  அரசு உதவி  பெறும் நோக்கில்  கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்கள் சிகிச்சை பெற  ஆனந்தபுரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இந்த தென்பகுதியைச்  சேர்ந்தவர் ஆனந்தபுரம் சென்று வர போதிய பஸ் வசதி இல்லை.இதனால் அவர்கள்  திசையன்விளை, சாத்தான்குளம் வந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்ந்த  கண்காணிப்பு  பகுதிகள் அதிகம் கிராமங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. எனவே  இதனை  பிரித்து புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது  இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆதலால் தென்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் முதலூர், ஆனந்தபுரம், படுக்கப்பத்து ஆகிய ஆரம்ப சுகாதார  நிலையத்தை பிரித்து புத்தன்தருவை, அல்லது அரசூர் பகுதியில்  புதிய சகாதார  நிலையம்  அமைக்க வேண்டும்  என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். புத்தன்தருவை ஊராட்சி மன்ற  துணைத் தலைவர் பிர்தவுஸ் கூறுகையில், புத்தன்தருவை பகுதி மக்கள் மருத்துவ  சிகிச்சை பெற படுக்கப்பத்து, திசையன்விளை பகுதிக்கு சென்று வர வேண்டிய நிலை  உள்ளது. உள்ளூரில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இதில் செவிலியர் மட்டும் வந்து சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறார். படுக்கை வசதி, மருத்துவர்கள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது. அரசு ஆரம் சுகாதார நிலையம் அமையுமானால் அதற்கான  தேவையான இடம் இலவசமாக அளிக்க தயாராக  உள்ளோம். மேலும் 2 ஆம்புலன்ஸ்  சேவையும் ஊர் மக்கள் சார்பில்  சுகாதார நிலையத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளோம், என்றார். ஊராட்சி மன்ற உறுப்பினர் கிதிர் முகைதீன் கூறுகையில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என  ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட  கலெக்டர், தமிழக சுகாதாரத்துறை மற்றும்  தமிழக முதல்வருக்கும் மனு  அனுப்பியுள்ளோம். அதில் வந்த பதிலில் தற்போது நிதி பற்றாக்குறை உள்ளதாகவும்,  பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.தமிழக  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய ஆரம்ப சுகாதார  நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதில்  இதனை கணக்கில் கொண்டு புத்தன்தருவையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க   நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மருத்துவ சேவைதான் கிராமங்களின்  உயிர்நாடி. ஆதலால் இதனை கருத்தில் கொண்டு முதலூர், படுக்கபத்து.  ஆனந்தபுரம் அரசு சுகாதார நிலையத்தை  பிரித்து புதிய சுகாதார நிலையம்  புத்தன்தருவையில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.அரசு பரிசீலனைசுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புத்தன்தருவை அருகில் பெரிய கிராமமான பெரியதாழை உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளதால் புத்தன்தருவையில் புதிய சுகாதார  நிலையம் அமைக்க சாத்திய கூறுகள் உள்ளன. இதுகுறித்து அரசு தரப்பிலும்  பரிசீலனையில் உள்ளது,  என்றார்….

The post புத்தன்தருவையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Budthandarvai ,Putthantharuvai ,Chatankulam Union ,Mudalur ,Dinakaran ,
× RELATED கருமேனி ஆற்றில் ஏற்பட்ட...