×

‘தேன் இளவரசி’ ஜவ்வாதுமலை

ஆரோக்கியத்துடன் சுவை தரும் விருந்து தமிழர்களின் உணவு முறை என்பது பசியையும், ருசியையும் மட்டுமே மையப்படுத்தியதில்லை. உயிருக்கு உரமூட்டும் அருமருந்தாக உணவுமுறையை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அந்த வகையில், உணவாகவும், உயிர்காக்கும் மருந்தாகவும் காலம் கடந்து நிலைத்திருக்கிறது தேன். அதிலும் ஜவ்வாது மலை தனி சிறப்பு வாய்ந்தது. கொம்புத் தேன், மலைத் தேன், மர பொந்துத் தேன், பெட்டித் தேன், கொசுத் தேன் என அவை உருவாகும் தன்மையின் அடிப்படையில் பல்வேறு வகைகள் உண்டு. மலைப்பாறைகளின் கூட்டில் கிடைப்பவை மலைத்தேன். மரக்கிளை களின் கூட்டில் கிடைப்பவை கொம்புத் தேன். இவை இரண்டும் மற்ற வகை தேனின் சுவையைவிட கூடுதல் சுவையும், பயனும் மிக்கது.மலர்களில் இருந்து மதுவை உண்டப்பின், தேனீ வெளியிடும் எச்சிலே தேனாகிறது. எந்தெந்த மலர்களில் இருந்து தேனீக்கள் மது குடிக்கிறதோ, அந்த மலர்களின் குணம்தான் தேனில் இருக்கும். அதனால், மலர்கள் மற்றும் பருவநிலை அடிப்படையில் தேன் சுவை மாறுபடும். இந்நிலையில், ‘தேன் இளவரசி’ என பெருமையுடன் அழைக்கப்படும்  ஜவ்வாது மலை பகுதியில் கொம்புத் தேன், மலைத் தேன்  இரண்டும் அதிக சுவையுடன் தனி சிறப்புடன் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் தேனில் உள்ள சுவைப்போல, வேறு எங்கும் இருப்பதில்லை என்பதுதான் இதன் தனித்துவமாகும்.கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் உள்ள ஜவ்வாதுமலை, ஒரு காலத்தில் சந்தனத்துக்கு புகழ்பெற்றதாக இருந்தது. மருத்துவத்துக்கு பயன்படும் அரியவகை மூலிகைகள் ஏராளமாக உள்ளன. ஜவ்வாதுமலையின் அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸ் முதல் 26.0 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆண்டு சராசரி மழையளவு 1,100 மி.மீ, இந்த பருவநிலைக்கு உகந்ததான சாமை, தினை, கேழ்வரகு, கொள்ளு, புளி, மா, கொய்யா, பலா, சீதாபழம், விளாம்பழம், லிச்சி, மிளகு போன்றவை இங்கு விளைகிறது. மேலும், ஜவ்வாதுமலையின் 46,429 ஹெக்டர் அடர் வனப்பகுதியில் செழித்திருக்கும் மரங்களிலும், மலைப் பாறைகளிலும் அடை அடையாக தொங்கும் தேன் கூடுகள் மூலம், இந்த மலைப்பகுதியின் செழிப்பையும், வளத்தையும் நாம் உணரலாம். இங்கு, ஜனவரி முதல் மார்ச் வரை மலர்கள் பூத்துக்குலுங்கும் காலம். எனவே, அந்த பருவத்தில் அதிக தேன்கூடுகள் காணப் படும். மழை காலங்களைவிட, வெயில் காலங்களில் கிடைக்கும் தேன் கூடுதல் சுவையுடையது.ஜவ்வாதுமலை பகுதியில் சிறு, சிறு குடியிருப்புகளாக 278 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் சுமார் 50 ஆயிரம் பழங்குடியின மக்களின் பிரதான வாழ்வாதாரம் தேன். பாறைகள் மற்றும் மரக் கிளைகளில் இருந்து தேன் கூடுகளில் தேனீக்களை விரட்டிவிட்டு தேனடைகளை எடுக்கின்றனர். அடையில் இருந்து பிழியப்படும் தேன், இளம் சூட்டில் பக்குவப்படுத்தி. அதலிருக்கும் மெழுகு, இறந்த தேனீ, இலை, பூ, அழுக்கு போன்ற தேவையற்றவைகளை நீக்கியதும், தூய்மையான தேனாக மாறுகிறது. மலைவாழ் மக்களிடம் இருந்து பச்சைத் தேன் கொள்முதல் செய்து, அக்மார்க் முத்திரையுடன் சந்தைப்படுத்தும் பணியில், ஜவ்வாதுமலை பழங்குடினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து, ஜவ்வாதுமலை தேன் உற்பத்தி நிலையத்தின் விற்பனை பிரிவில் பணிபுரியும் திருப்பதி கூறுகையில், ரசாயன கலப்பு இல்லாமல், சுத்தமான தேன் விற்பனை செய்வதால், ஜவ்வாதுமலைத் ேதன் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மகளிர் திட்டத்தின் நேரடி நிர்வாகத்தில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. உலக தரமான முறையில் தேன் சுத்திகரிப்பு, நவீன முறையில் பேக்கிங், அக்மார்க் அங்கீகாரம் போன்றவை இங்கு உற்பத்தியாகும் தேனின் தரத்துக்கு சான்றாகும் என்றார். தேனின் மருத்துவ பயன்கள் குறித்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கிருபாகரன் கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்திலும், உணவு முறையிலும் முக்கிய இடம் பெற்றது தேன். பல்வகை நோய் தீர்க்கும் இயற்கையின் அருமருந்தாகவும் பயன்படுகிறது என்றார்.– கி.வினோத்குமார்,ஒரு கதை சொல்லட்டா சார்… ஒரு தேன் கூட்டில் மூன்று வகை தேனீக்கள் இருக்கும். ஒரே ஒரு ராணித் தேனீயும், ஆயிரக்கணக்கான ஆண் தேனீக்களும், பல்லாயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்களும் இருக்கும். இவற்றில் ராணித் தேனீ முட்டையிட்டு, இனவிருத்தி பணியை மட்டும் செய்யும். அக்கூட்டின் தலைவன்  ராணித் தேனீதான். சராசரியாக மூன்று வருடங்கள் வரை உயிர் வாழும். வேலைக்காரத் தேனீக்கள் 35 நாட்கள் வரை உயிர்வாழ்கின்றன. ஆனால், மற்ற ஆண் தேனீக்கள் ராணித் தேனீயுடன் உறவுகொண்ட பின் இறந்துவிடும். உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பதப்படுத்துவது போன்ற மிக முக்கியப் பணிகளை வேலைக்காரத் தேனீக்கள் செய்கின்றன. தேன் கூட்டைப் பராமரிப்பது இதர ஆண் தேனீக் களின் வேலை. இப்படி ஒவ்வொரு வேலையையும் பிரித்துக்கொண்டு அழகாக செய்து முடிக்கின்றது. பூக்கள் பூக்காத காலங்களிலும், தங்களுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைத்துக்கொள்ளும். அதனால்தான், ஆண்டொன்றுக்கு 450 கிலோ எடையளவில், மலரின் குளுகோஸ், புரோபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மலரின் மகரந்தத்தை முன்கூட்டியே கூட்டில் சேர்த்து விடுகின்றன.  தேனீக்கள் தேனைச் சேகரித்துப் பதப்படுத்துவதுதான்  உணவுப் பதப்படுத்துதலின் முதல் முன்னோடி எனலாம்.தேனீக்கள் தங்கள்  உணவுக்காக வருடத்துக்கு 1 லட்சம் கி.மீ தூரம் வரை பயணிக்கும், பறக்கும் வேகம் சராசரியாக மணிக்கு 40 கி.மீ, தேனீக்கள் தன் கூட்டைக் கலைத்து ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லும்போது, முதலில் அக்கூட்டில் இருந்து ஒரு வேலைக்காரத் தேனீ சென்று, ஏதேனும் புதிய இடம் கூடு கட்டுவதற்கு ஏற்ற இடமாக உள்ளதா, தட்ப வெப்ப சீதோஷ்ணம் சீராக உள்ளதா என்று ஆராய்ந்து வரும். பின், தான் அறிந்த தகவலை இதர வேலைக் காரத் தேனீக்களுடன் நடன அசைவுகள் மூலம் தெரிவிக்கும். உடனே, மற்ற தேனீக்களும் சென்று, அந்த இடத்தைப் பார்வையிட்டு வந்த பின்பு, ஒன்று கூடி இடப்பெயர்ச்சியைத் தீர்மானிக்கும்.   அதே போல், உணவுத் தேவை ஏற்படும்போது, உளவு பார்க்கும் தேனீக்கள் சில  முதலில் சென்று, பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக்கொண்டு, கூட்டுக்குத் திரும்பும். வழக்கம்போல் இதை மற்ற வேலைக்காரத் தேனீக்களுக்கு தாங்கள் கண்டறிந்த சோலை எந்தத் திசையில், எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடன அசைவுகள் மூலம் தெரிவிக்கும்.“சித்த மருத்துவத்தில் தேன் பயன்பாடு முக்கியமானதாகும். மருந்துகளுக்கு துணை மருந்தாக செயல்பட்டு மருந்தின் வீரியத்தை அதிகரிக்கிறது. அதோடு, தேன் தனித்த மருந்தாகவும் பயன்படுகிறது. பால், பழம், தினை மாவு போன்றவற்றுடன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். ஆயுள் நீட்டிக்கவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் தேன் முக்கியமானது. உடல் வலிமையை அதிகரித்து, சோர்வு நீக்கும். பசியை தூண்டும், நல்ல தூக்கம் கிடைக்கும். மலச்சிக்கலை போக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். குளுகோஸ், சுக்ரோஸ், புரதம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற பல்வேறு சத்துக்கள் தேனில் உள்ளன. காலை உணவுக்கு முன்பு, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடித்தால் உடல் புத்துணர்வு பெறும். இதய நோய் உள்ளவர்களுக்கும் தேன் பயன்தரக்கூடியது. தேனுடன் இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும். தூக்கமின்மையால் அவதிபடுவோர், பாலுடன் தேன் கலந்து குடிப்பது பயனளிக்கும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூண்டு சாற்றுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம். என்கிறார் சித்த மருத்துவர் மானக்‌ஷா….

The post ‘தேன் இளவரசி’ ஜவ்வாதுமலை appeared first on Dinakaran.

Tags : Javvadumalai ,
× RELATED கோடை கால இயற்கை சுற்றுலா * 100 மாணவ –...