×

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தற்போதைய நிலையில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான பி.வைரமுத்து மற்றும் நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோர் தனித்தனியாக கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த செப்டம்பர் 30ம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் அதிமுக பொதுக்குழு தேர்தலை நடத்தவும் தடை விதித்திருந்தது. இதையடுத்து அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு என்பது அற்பமானது என்றும், தமக்கு தான் அதிகப்படியான பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணராவ், ‘‘இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஒரு வாரத்தில் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். வரும் 30ம் தேதிக்குள் அனைத்து தரப்பும் தங்களது வாதங்களையும், ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போது உள்ள நிலையில் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’’ என தெரிவித்து விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்….

The post அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Indirect Public Co. ,New Delhi ,Bannerisselvam ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...