×

மீனவர்களை பாதிக்கிற திட்டங்களை திராவிட மாடல் அரசு ஏற்காது முட்டம்; விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உறுதி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்கம், குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு சார்பில் நேற்று உலக மீனவர் தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: திமுக ஆட்சியில்தான் மீனவர்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் வந்துள்ளன. மீனவர் நல வாரியம், மீன்பிடி தடைக்கால நிவாரணம், டீசல் மானியம் உயர்வு போன்றவற்றை தந்தது கலைஞர் அரசு தான். சிறுபடகுகளுக்கு மண்ணெண்ணெய், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதில் முனைப்பு, வௌிநாடுகளில் சிறையில் வாடிய 170 மீனவர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. 320 கோடி மீனவர்களுக்கு நிவாரணம், ரூ. 743 கோடியில் கடலரிப்பு தடுப்பு சுவர் ஒதுக்கீடு செய்தது. 15 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய், மீன் பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரமாக உயர்த்தியது ஸ்டாலின் அரசு. விரைவில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 8 ஆயிரமாக உயர்த்தப்படும். 14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித்தரப்படும். கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் காலம் 7 ஆண்டுகள் என்பது அதிகம். இதனை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கடல் ஆம்புலன்ஸ், சர்வதேச அடையாள அட்டை, அரசின் கவனத்தில் உள்ளது. நிதிநிலையை பொறுத்து அவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தருவார். பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். வீடுகள் காலி செய்ய வேண்டும். திமுக இதனை ஏற்காது. உங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ‘அதிமுக ஆட்சி, 5.45 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டு சென்றுள்ளது. அந்த கடனை தீர்த்து, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் நிர்வாக திறமையுடன் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறார். என்றென்றும் திமுக அரசு மீனவர்களுக்கு பாதுகாப்பாக துணை நிற்கும்’ என்றார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.200 கோடி ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படுகின்ற திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நல்ல திட்டங்கள் மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் நிறைவேற இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை’ என்றார்….

The post மீனவர்களை பாதிக்கிற திட்டங்களை திராவிட மாடல் அரசு ஏற்காது முட்டம்; விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.

Tags : Dravida model government ,Udayanidhi Stalin ,MLA ,Nagercoil ,Kanyakumari District ,Muttam ,Coastal Peace and Development Movement ,Kumari District Fishermen's Federation ,Dravidian Model Government ,Dinakaran ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...