×

நாடோடிகள்-2 - விமர்சனம்

ஊரில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், உடனே களத்தில் குதித்து நியாயம் கேட்கும் சமூக போராளி, சசிகுமார். அவருக்கு தோழர்களாக இருந்து வலு சேர்ப்பவர்கள் டாக்டர் அஞ்சலி, பரணி மற்றும் ஒரு  பெரியவர். ‘நாமாவோம்’ என்ற இயக்கத்தை தொடங்கி, சாதி இல்லாத சமூகத்தை உருவாக்க அவர்கள் பாடுபடுகின்றனர். இது சசிகுமார் சாதியினருக்கும், அதன் தலைவருக்கும் பிடிக்கவில்லை. கடுமையாக எதிர்க்கின்றனர். இந்நிலையில், சசிகுமாருக்கு அவரது சாதியை சேர்ந்த அதுல்யாவுடன் திருமணம் நடக்கிறது. முதலிரவில் அதுல்யா தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.

காரணம், வேறு சாதியை சேர்ந்த இசக்கி பரத்தை அவர் காதலிக்கிறார். இதையறிந்து தன் மனைவியை அவளது காதலனுடன் சேர்த்து வைக்கிறார் சசிகுமார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். சமுத்திரக்கனியின் படம் என்றாலே சமூக சாடல்களும், அதற்கான தீர்வுகளும் இருப்பது வழக்கம். இப்படத்திலும் காட்சிக்கு காட்சி அதை வலியுறுத்துகிறார். ஆனால், சில இடங்களில் அதுவே ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது. அதை இயக்குனர் கவனித்து இருக்கலாம்.

பக்கம், பக்கமாக டயலாக் பேசுவது சசிகுமாருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. படத்தின் கேரக்டருக்கு ஏற்ப நடித்து, இறுதியில் தன்ைன நம்பாமல் வெறுத்த அதுல்யா, இசக்கி பரத்துக்கு பாடம் புகட்டுகிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடி செய்துள்ள அவர், படம் முழுக்க புரட்சிகரமான வசனங்களை பேசியிருக்கிறார். தோழர் செங்கொடி கேரக்டரில் அஞ்சலி அசத்தி இருக்கிறார். பெரியவர் கொளுத்திப்போட்ட பிறகு அவரும், சசிகுமாரும் காதல் பார்வையில் கரைவது நயமாக இருக்கிறது.

அதுல்யா மேக்கப் இல்லாமல், யதார்த்த பெண்ணாக வருகிறார். பரணி, நமோ நாராயணன், துளசி, பிச்சைக்காரன் மூர்த்தி, கு.ஞானசம்பந்தம், தோழர் பெரியவர் போன்றோர் அந்தந்த கேரக்டராகவே மாறியிருக்கின்றனர். என்.கே.ஏகாம்பரத்தின் கேமரா, காட்சிகளின் நகர்வுக்கு விறுவிறுப்பு கூட்டுகிறது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, பல இடங்களில் இரைச்சலாக இருந்தாலும், கிளைமாக்சின் வேகத்துக்கு உதவி செய்துள்ளது. பாடல்கள் பரவாயில்லை.

சாதி வேண்டாம் என்பதை பற்றி சொல்வதா? காதலைப் பற்றி சொல்வதா என்ற போராட்டத்தில், உடுமலைப்பேட்டை ஆணவக்கொலை, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசாரின் அராஜகம், டிராபிக் கான்ஸ்டபிள் விவகாரம், போலீஸ் வேலையில் சேர்ந்த திருநங்கை உள்பட பல விஷயங்களை ஒரே படத்தில் சொன்னவிதத்தில் சுவாரஸ்யம் குறைகிறது. சாதியற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியதற்காக இயக்குனரை பாராட்டலாம். நாடோடிகள் படத்துடன் ஒப்பிடும்போது, நாடோடிகள் 2 வலிமை குறைவு.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!