×

பங்குச்சந்தை முதலீட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு; சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிக்கும் இளம்பெண் கொலை: மருந்துக் கடை உரிமையாளர் அதிரடி கைது

பிலாஸ்பூர்: பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை திருப்பிக் கேட்ட சிவில் சர்வீசஸ் பெண் தேர்வரை மருந்துக் கடை உரிமையாளர் கொலை செய்த சம்பவம் சட்டீஸ்கரில் நடந்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த பிரியங்கா சிங் (24) என்பவர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிலாஸ்பூர் நகரின் கஸ்தூரிபா நகர் பகுதியில் நின்றிருந்த காரில் இறந்த நிலையில் இருந்த பிரியங்கா சிங்கின் சடலத்தை கோட்வாலி போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆர்யா கூறுகையில், ‘தயாள்பந்த் பகுதியில் மருத்துவக் கடை வைத்திருக்கும் ஆஷிஷ் சாஹுவின் காரில் பிரியங்கா சிங்கின் சடலம் மீட்கப்பட்டது. பிரியங்கா சிங் தயாள்பந்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்து வந்தார். ஆஷிஷ் சாஹூவும், பிரியங்கா சிங்கும் நட்புடன் பழகி வந்தனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பிரியங்கா சிங்கிடம் பணம் பெற்றுள்ளார். அவர் அளித்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். இதன்மூலம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ‘ரிட்டன்ஸ்’ கிடைத்துள்ளது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டத்தில் ரூ.11 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியங்கா சிங், சாஹுவின் மருத்துவக் கடைக்கு வந்து பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று மறுத்துள்ளார். அதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பிரியங்கா சிங்கை ஆஷிஷ் சாஹூ அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றார். கொலையை செய்த பிறகு, பிரியங்கா சிங்கின் உடலை தனது கடைக்குள் வைத்திருந்தார்; பின்னர் பிரியங்கா சிங்கின் உடலை தனது காரில் எடுத்துச் சென்று அவரது சொந்த ஊரில் நிறுத்திவிட்டு தலைமறைவானார். இதற்கிடையே பிரியங்கா சிங் வீடு திரும்பவில்லை எனக்கூறி அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பிரியங்கா சிங்கை தேடிவந்தோம். பிரியங்கா சிங்கின் செல்போன் எண்ணின் அடிப்படையில் அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டது. அதன்பின் ஆஷிஷ் சாஹுவை கைது செய்தோம்’ என்றார்….

The post பங்குச்சந்தை முதலீட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு; சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிக்கும் இளம்பெண் கொலை: மருந்துக் கடை உரிமையாளர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Bilaspur ,Civil ,Dinakaran ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து