×

2022 உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் கத்தார்-ஈக்வடார் மோதல்

அல்கோர்: வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கால்பந்து உலகக்கோப்பை திருவிழா இன்று கத்தாரில் துவங்குகிறது. இன்று இரவு நடைபெற உள்ள முதல் போட்டியில் கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. 32 நாடுகள் பங்கேற்கும் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் இன்று கத்தார் நாட்டில் துவங்குகிறது. கத்தாரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான அல் கோரில் உள்ள அல் பைட் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன.இந்திய நேரப்படி இப்போட்டி இரவு 9.30 மணிக்கு துவங்குகிறது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு இதே மைதானத்தில் உலகக்கோப்பை திருவிழாவை முன்னிட்டு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கத்தார் கால்பந்து வரலாற்றில், அந்நாட்டுக்கு இது முதல் சர்வதேச அளவிலான பெரிய போட்டி என்று கூறலாம். இதற்கு முன்னர் கடந்த 2002ம் ஆண்டு முதன் முதலாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று ஆடிய செனகல், முதல் போட்டியில் பிரான்சை வீழ்த்தி, கால்பந்து உலகை அதிர வைத்தது. இன்றைய போட்டியில் கத்தார் வென்றால், அதே சாதனை மீண்டும் ஒருமுறை என்ற நிலை. ஈக்வடார் சிறிய நாடாக இருந்தாலும், கால்பந்து விளையாட்டை பொறுத்தவரை, 2ம் தரத்தில் உள்ள சற்று வலிமையான அணிதான். கால்பந்து ஃபிபா தரவரிசையில் தற்போது ஈக்வடார் 44ம் இடத்தில் உள்ளது. கத்தார் 50ம் இடத்தில் உள்ளது.போட்டி கத்தாரில் நடைபெறுகிறது என்பது அந்த அணிக்கு சாதகமான விஷயம். கத்தார் அணியின் முன்கள வீரர்களில் ஒருவரான அகமது அலால்தீன், கடந்த வாரம் அல்பேனியாவுடன் நடந்த நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியின் போது காயமடைந்தார். இருப்பினும் அவர் முழுமையாக குணமடைந்து விட்டார் என்றும், இன்றைய போட்டியில் ஆடுவார் என்றும் கத்தார் அணியின் பயிற்சியாளர் பெலிக்ஸ் சாஞ்சஸ் பாஸ் அறிவித்துள்ளார். அணியின் ஸ்டார் பிளேயர் அல்மோஸ் அலி, இன்றைய போட்டியில் கோல் அடித்தால், கத்தார் வீரர்களில் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனை படைப்பார். அவர் சர்வதேச போட்டிகளில் இதுவரை 42 கோல்களை அடித்துள்ளார். ஈக்வடார் அணி இதுவரை 3 உலகக்கோப்பை தொடர்களில் (2002, 2006, 2014) ஆடியுள்ளது. அந்த அணியின் கோல் கீப்பர் அலெக்சாண்டர் டொமினிகஸ், ரைட் பேக் பிளேயர்கள் ஆஞ்சலோ பிரிசியாடோ மற்றும் ராபர்ட் அர்போலேடா ஆகியோர் கிளப் போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகின்றனர்.முதல் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற துடிப்பில் இரு அணியின் வீரர்களும் இன்று களம் இறங்கவுள்ளனர்.  …

The post 2022 உலக கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் கத்தார்-ஈக்வடார் மோதல் appeared first on Dinakaran.

Tags : 2022 World Cup Soccer ,Qatar ,Ecuador ,AL GORE ,Football World Cup ,2022 World Cup Football ,Dinakaran ,
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...