×

நெருங்குது தைப்பூசம்; புதர் மண்டிய பாதையை சீரமைக்க கோரிக்கை

பழநி: தைப்பூசம் நெருங்கி வரும் நிலையில், புதர் மண்டிக் கிடக்கும் பாதயாத்திரை பக்தர்களின் நடைபாதையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு பாதாயத்திரையாக வருவது வழக்கம். இவ்விழா வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி துவங்க உள்ளது. எனினும், அரையாண்டு தேர்வு விடுமுறை காலம் மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துவிடுவர். பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் நலன்கருதி திண்டுக்கல்&பழநி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பிரத்யேக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நடைமேடையின் பல பகுதிகள் தற்போது புதர்மண்டியும், கற்கள் பெயர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நடைமேடை சேதமடைந்திருந்தால் பக்தர்கள் சாலையோரங்களில் நடக்க துவங்கி விடுவர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஜனவரி மாத துவக்கத்தில் இருந்தே பக்தர்கள் பாதயாத்திரையாக வர துவங்கி விடுவர். எனவே, தற்போதே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள நடைமேடைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாதயாத்திரை வழித்தடத்தில் மின்விளக்குகள் பொருத்தவும், போலீசார் ரோந்துப்பணியை ஏற்படுத்தவும் வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post நெருங்குது தைப்பூசம்; புதர் மண்டிய பாதையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Taphasa ,Palani ,Daipusam ,Pathyatri ,Tapeosa ,Dinakaran ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...