×

வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் சீரமைப்பு பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம்

ஈரோடு: ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க சீரமைப்பு பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளதால், அவ்வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் பகுதியில் உள்ள பழைய ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த நுழைவு பாலத்தின் கீழ் புற சாலை வழியே வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், லோகநாதபுரம், பாலதண்டாயுதம் வீதி, லட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் மக்களும், சோலார் மற்றும் கரூர் சாலையில் இருந்து வரும் மக்களும் பிரதானமாக பயன்படுத்தி வந்தனர். இந்த பாலத்தின் கீழ் மழை காலங்களில் எப்போதும் மழை நீர் தேங்கி நிற்கும். இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து பொதுமக்களின் தொடர் புகார் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் சார்பில் பழைய ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ்புற பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மழை நீர் பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையின் காரணமாக வெண்டிபாளையம் பழைய ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீரும், வாய்க்கால் கசிவு நீரும் சேர்ந்து 3 அடி உயரத்துக்கு குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.இந்நிலையில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ரயில்வே நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கியதை நேரில் பார்வையிட்டு, கடந்த வாரம் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் நுழைவு பாலத்தில் தேங்கும் மழைநீர் மற்றும் கசிவு நீரினை தேங்காமல் இருக்க சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதன்பேரில், ரயில்வே நுழைவு பாலத்தில் சீரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதற்காக நுழைவு பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு, நுழைவு பாலத்தின் இருபுறங்களிலும் வடிகால் வசதி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.போக்குவரத்து மாற்றம்: வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் புறத்தில் சீரமைப்பு பணி காரணமாக, அப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மரப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் பழைய கரூர் சாலையில் செல்வதற்கு பதிலாக பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. இதேபோல மோளகவுண்டம்பாளையம் பகுதியிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த சாலை முகப்பு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் குறித்து முறையான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது….

The post வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் சீரமைப்பு பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Vendipalayam railway ,Erode ,Vendipalayam ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்