×

2ம் சீசன் நிறைவு எதிரொலி: தாவரவியல் பூங்காவில் இருந்து 15 ஆயிரம் மலர் அலங்கார தொட்டிகள் அகற்றம்

ஊட்டி,: சுற்றுலா பயணிகள் பார்வைக்காக தாவரவியல் பூங்கா மாடங்களில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன. சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு மாதங்கள் முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. இச்சமயங்களில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மாடங்களில் வைக்கப்படுகிறது. மேலும், மே மாதம் நடத்தப்படும் மலர் கண்காட்சியை காண வெளி மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.  இதேபோல், ரோஜா பூங்காவில், ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இதேபோல், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. இவ்விரு மாதங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கவர பெரிய அளவிலான விழாக்கள், கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுவதில்லை. எனினும், தாவரவியல் பூங்காவில் மட்டும் புதிதாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அந்த தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இம்முறையும் இரண்டாம் சீசனை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனை கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 15 ஆயிரம் தொட்டிகளில் மாடங்களிலும், 2 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பெர்னஸ் புல் மைதானத்திலும் பல்வேறு வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதியுடன் இரண்டாம் சீசன் முடிந்ததாலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததாலும், மலர்கள் வாடாமல் இருந்ததாலும் அலங்காரம் தொடர்ந்து வைக்கப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில், முதல் சீசனுக்கான விதை சேகரிப்பு மற்றும் விதைப்பு பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காவில் உள்ள மலர்கள் மட்டுமின்றி தொட்டிகளில் உள்ள மலர் செடிகளும் காய்ந்து போக ஆரம்பித்தன. இதனை தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக பூங்கா புல் மைதானம் மற்றும் மாடங்களில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன. தற்போது முதல் சீசனுக்கான பணிகள் துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது….

The post 2ம் சீசன் நிறைவு எதிரொலி: தாவரவியல் பூங்காவில் இருந்து 15 ஆயிரம் மலர் அலங்கார தொட்டிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Botanic Park ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...