×

கடற்படை வீரர் என்று பேஸ்புக் மூலம் நட்பாக பழகி காதலிக்க மறுத்த கேரள இளம் பெண் முகத்தை பீர் பாட்டிலால் சிதைத்து கொல்ல முயற்சி; சிசிடிவி மூலம் காதலனை கைது செய்த தனிப்படை: 25 தையல்களுடன் உயிருக்கு போராட்டம்

சென்னை: கடற்படை வீரர் என்று பேஸ்புக் மூலம் பழகி காதலிக்க மறுத்த கேரள இளம் பெண் முகத்தை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை தனிப்படை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் முகத்தில் 25 தையல்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். கேரள மாநிலம் ஆம்பூரி அருகே உள்ள கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் சோனு ஜோசப்(20). ஹோட்டல் மேனேஸ்மெண்ட் படித்த இவருக்கு, கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றில் வேலை கிடைத்தது. அதன்படி கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சோனு ஜோசப் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது விடுதிக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சோனு ஜோசப்பை வழிமறித்து ‘தன்னை காதலித்து திருமணம்  செய்து கொள்ளும் படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் சோனு ஜோசப் அவரின் காதலை ஏற்ற மறுத்து விடுதிக்கு சென்று  கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த  அந்த வாலிபர் சோனு ஜோசப்பிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த அந்த வாலிபர், கையில் கொண்டு வந்த பீர் பாட்டிலை எடுத்து நடந்து  சென்று சோனு ஜோசப் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலை குலைந்த சோனு ஜோசப் மயங்கி கீழே விழுந்தார். அப்போது ஆத்திரம் தீராத அந்த வாலிபர், உடைந்த பீர் பாட்டிலால் சோனு ஜோசப் முகத்தில் சரமாரியாக குத்தினார். மேலும், வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளிலும் குத்தி பெரும்காயத்தை ஏற்படுத்தினார். இதை கவனித்த சாலையில் சென்ற பொதுமக்கள் சோனு ஜோசப்பிற்கு உதவி கேட்டு அலறினர். பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடியதை கவனித்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். முகம் கிழிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சோனு ஜோசப்பை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சோனு ஜோசப்பிற்கு முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டும், உடல் முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை கொடுத்த தகவலின் படி கீழ்ப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றவாளியை பிடிக்க கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் வாலிபரின் செல்போன் சிக்னல் உதவியுடன் சென்னையை சேர்ந்த நவீன்(25) என்ற வாலிபரை நேற்று கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட காதலன் நவீன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கேரள மாநிலத்தை சேர்ந்த சோனு ஜோசப்பும் நானும் கடந்த 6 மாதங்களாக பேஸ்புக் மூலம் பழகி வந்தோம். எங்கள் பழக்கம் காதலாக மாறியது. இதனால் நாங்கள் செல்போன் நம்பர்களை பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டோம். நான் அவரிடம் கடற்படையில் வேலை செய்வதாக கூறியிருந்தேன். அதை அவர் நம்பினார். ஆனால் நான் கடற்படையில் வேலை செய்யவில்லை. கடற்படையில் பணியில் சேர முயற்சி செய்து வருகிறேன். பிறகு என்னை நம்பி சோனு ஜோசப் சென்னைக்கு பணிக்கு வந்தார். அதற்கான ஏற்பாடுகளை நான் தான்  செய்து கொடுத்தேன். சென்னை வந்த பிறகு நானும் சோனு ஜோசப்பும் நேரில் சந்தித்து பேசி பழகி வந்தோம். பின்னர் நான் அவரை காதலிப்பதாக கூறினேன். எனது காதலை அவர் முதலில் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு நான் கடற்படையில் வேலையில் இல்லை என்று கூறி அவரை சமாதானம் செய்ய முயன்றேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இதனால் எங்களுக்குள் கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சோனு ஜோசப் என்னை ஏமாற்றிய உன்னை, நான் எப்படி நம்புவது, நான் உன்னை காதலிக்கவில்லை என்று கூறி சென்று விட்டார். அதன்பிறகு நான் அவரை பல முறை செல்போனில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்றேன். ஆனால் அவர் எனது போனை எடுக்கவில்ைல.  பிறகு நான் சோனு ஜோசப் வேலைசெய்யும் ரெஸ்டாரண்டிற்கு ஒரு வாரம் முன்பு நேரில் சென்று சந்தித்து பேசி எனது காதலை தெரிவித்தேன். ஆனால் அவர், பொய் சொல்லும் உன்னுடன் இனி நான் பேசமாட்டேன். என்னை தொந்தரவு செய்தால் நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறி மிரட்டினார். எனது காதலை புரிந்து கொள்ளாத அவர் என்னை உதாசீனப்படுத்தினார். அதேநேரம் சோனு ஜோசப் ‘விமான பணி பெண்’ஆகவேண்டும் என்று கூறி படித்து வருகிறார். அழகாக இருப்பதால் தான் எனது காதலை ஏற்க மறுக்கிறார். சோனு ஜோசப்பிற்கு அழகு இல்லை என்றால் அவர் விமான பணி பெண்ணாக முடியாது என்று நினைத்தேன். அதேநேரம் என்னை பயன்படுத்தி கேரளாவில் இருந்து சென்னை வந்து வேலைக்கு சேர்ந்த பிறகு என்னை விட்டு விலகி செல்கிறார். எனவே எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதன்படி கடந்த ஒரு வாரமாக சோனு ஜோசப்பை பின் தொடர்ந்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி கூறினேன். ஆனால் அவர் எனது காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் நான் அவரை கொலை செய்ய முடிவு செய்து கடந்த 14ம் தேதி இரவு மது அருந்திவிட்டு பீர் பாட்டிலை உடலில் மறைத்து கொண்டு சோனு ஜோசப் வேலை முடிந்து விடுதிக்கு செல்லும் போது, பின் தொடர்ந்து  தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கி ‘அழகான முகத்தை கொடூரமாக குத்தினேன்.அப்போதும் எனக்கு ஆத்திரம் தீராததால் தான் அவரை உடல் முழுவதும் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்றேன். ஆனால் அவர் உயிர்பிழைத்துவிட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நவீன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்….

The post கடற்படை வீரர் என்று பேஸ்புக் மூலம் நட்பாக பழகி காதலிக்க மறுத்த கேரள இளம் பெண் முகத்தை பீர் பாட்டிலால் சிதைத்து கொல்ல முயற்சி; சிசிடிவி மூலம் காதலனை கைது செய்த தனிப்படை: 25 தையல்களுடன் உயிருக்கு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Facebook ,Chennai ,Kerala ,Navy ,
× RELATED ஆன்லைன் பண மோசடி: சைபர் கிரைம் விசாரணை